கமல்ஹாசனுக்கு கொங்கு இளைஞர் பேரவை ஆதரவு (வீடியோ)

வியாழன், 20 ஜூலை 2017 (18:48 IST)
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் பொதுச்செயலாளர் கார்வேந்தன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.


 

 
அப்போது அவர் பேசியதாவது:
 
நடிகர் கமல்ஹாசன் ஒரு பத்திரிக்கை சந்திப்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்துள்ளதாக ஒரு கருத்து சொன்னதற்காக, அமைச்சர் பெருமக்கள் மாறி, மாறி நடிகர் கமலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
இதற்கு, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர் கண்டனம் தெரிவிக்கிறது. இந்தியாவின் கடைக்கோடி தமிழர்கள் வரை கருத்து சுதந்திரம் உள்ள நிலையில் அரசியல்வாதிகள் மட்டுமே கருத்துகள் சொல்லலாம். மற்றவர்கள் பேசக்கூடாது என்பது மிகவும் கண்டனத்திற்குரியது. கருத்து சொல்வதற்கு நடிகர்களுக்கும் உரிமை இருக்கிறது” என அவர் பேசினர்.
 
அதன்பின், கொங்கு இளைஞர் பேரவையிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளர் தனியரசு பற்றி அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
 
எங்கள் (தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின்) முன்னாள் ஒருங்கிணைப்பாளர் தனியரசு, கட்சியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து இன்றும் அவர் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையை முறைகேடாக பயன்படுத்துகின்றார் என்று தேர்தல் ஆணையத்திற்கும் பல முறை மனு கொடுத்தும் இன்னும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை, பிரபல தனியார் தொலைக்காட்சியில் (சன் டி.வியில்) நேர்காணலில், உங்களது கட்சியின் பெயர் என்ன என்று தனியரசுவை கேட்டதற்கு தனியரசு பேரவை என்பது தான் எனது கட்சி என்று அவரே ஒத்துக் கொண்டுள்ளார். 
 
மேலும் அந்த தொலைக்காட்சி நிருபர் நீங்கள் (தனியரசு) அ.தி.மு.க வில் ஐக்கியமாகியுள்ளீர்களா என்று கேட்டதற்கு, நான் அ.தி.மு.க வில் மட்டுமல்ல, தி.மு.க விலும் இருக்கின்றேன், பொதுவுடமை கட்சியில் உள்ளேன் என்றும், ஏன் நக்சலிலும் உள்ளேன் என்றும் பேட்டியளித்துள்ளார். 
 
ஒரு சட்டமன்ற உறுப்பினரே நக்சலில் இருப்பதாக கூறியதை இன்னும் அரசு எப்படி மெளனம் காக்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், எங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதையும் அவர் கூறியதை வைத்தும் அவர் அரசால் தடை செய்யப்பட்ட நக்சலில் தான் உள்ளாரா என்றும், அவரது சொந்த தம்பி மீதும் அவர் தாக்குதல் நடத்தியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையினர் மீது ஏதும் தாக்குதல் நடத்தாமல் இருக்க, போலீஸார் பாதுகாப்பு தரவேண்டுமென்றார்.

சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்
 

வெப்துனியாவைப் படிக்கவும்