கணவர் தியாகுவிற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் கவிஞர் தாமரை

வியாழன், 5 மார்ச் 2015 (20:42 IST)
கவிஞர் தாமரை தனது கணவர் தியாகுவிற்கு எதிராக 7ஆவது நாளாகப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.


 
கவிஞரும், பாடலாசிரியருமான தாமரை கடந்த வெள்ளிக் கிழமை (பிப்ரவரி 27-2015) தனது கணவர் தியாகுவிற்கு எதிராக சூளைமேட்டில் உள்ள தியாகுவின் இல்லத்தில் போராட்டத்தை அறிவித்தார்.
 
அது முதல் இன்றுவரை அவர் தனது போராட்டத்தை பல்வேறு இடங்களில், தெருவில் தங்கி நடத்தி வருகின்றார். அவர் 'தமிழுக்கு உழைத்தேன் தெருவுக்கு வந்துவிட்டேன் தமிழ் உணர்வுள்ளவர்களே சம்மதம்தானா?'  என்று எழுதப்பட்டுள்ள பேனருடன் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.   
 
இது குறித்து கவிஞர் தாமரை தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:-
 
இன்று (5.3.15) ஏழாவது நாளாகப் போராட்டம் தொடர்கிறது.
 
சமாதான முயற்சி எடுத்த ஓவியர் வீரசந்தனம் ஐயா, இயக்குனர் வ.கௌதமன், வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் மூலம் தியாகு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
 
அதற்கான பதில் அனுப்ப ஒரு நாள் அவகாசம் எடுத்துக் கொண்டேன். இன்று பதில் அனுப்புகிறேன். முடிவு அதன் பிறகு தெரியும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
தனக்கு சட்ட ரீதியிலான தீர்வு தேவையில்லை என்றும் சமூகரீதியிலான முடிவுதான் தேவை என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்