கச்சத்தீவை நான் தாரை வார்க்கவில்லை : விளக்கம் அளித்த கருணாநிதி

செவ்வாய், 21 ஜூன் 2016 (12:54 IST)
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக, திமுக மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.


 

 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
கச்சத்தீவு பற்றி தமிழகச் சட்டப் பேரவையில் நேற்றைய தினம் பிரச்சினை ஏற்பட்டு, முதலமைச்சர் ஜெயலலிதா,  கச்சத் தீவு பற்றிப் பேச  கருணாநிதிக்கு அருகதை இல்லை என்று ஆவேசமாக முழங்கியிருக்கிறார். 1991ஆம் ஆண்டிலிருந்து அவர் இதே கதையைத் தொடர்ந்து பேரவையிலும், வெளியிலும் பல முறை கூறி, அதற்கு நான் அவ்வப்போது விளக்கமும் அளித்து விட்டேன்.  தூங்குபவர்களை எழுப்ப முடியும், தூங்குவது போல நடிப்பவர்களை எப்படி எழுப்ப முடியும்?  இருந்தாலும் இப்போது அவர் “கச்சத்தீவு” பற்றியும், என்னைப் பற்றியும்  பேசியிருப்பதால், மீண்டும் அது பற்றிய விளக்கத்தை ஒரு முறை அளிக்கிறேன்.
 
உதாரணமாக,  22-3-2009 அன்று ஜெயலலிதா வெளியிட்ட  அறிக்கையில்  “கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கை கட்டி, வாய் பொத்திக் கொண்டிருந்தவர் தான்  தற்போது தமிழகத்தில் முதலமைச்சராக இருக்கிறார்”  என்றார்.   உடனடியாக நான், “கச்சத் தீவை  இந்தியா தாரை வார்த்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் நான் இருந்ததாகச் சொல்கிறாரே,  நான் தெரிவித்த எதிர்ப்பை ஆதார பூர்வமாக எடுத்துச் சொன்னால்  - எழுதியது தவறு என்று மன்னிப்பு கேட்க ஜெயலலிதா தயாராக இருக்கிறாரா?” என்று எனது அறிக்கையில் கேட்டேன்.
 
15-8-1991 அன்று  ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து  கோட்டையிலே  சுதந்திர தின விழாவினைக் கொண்டாடிய போது  ஆற்றிய உரைக்கு அனைத்து ஏடுகளும் கொடுத்த தலைப்பே,  “கச்சத் தீவை மீட்க ஜெயலலிதா சபதம்” என்பது தான். ஆனால்,  1991 முதல்  1996 வரையிலும்  -  பிறகு  2001 முதல்  2006ஆம் ஆண்டு வரையிலும், 2011 முதல் இதுவரையில்  பதினைந்து ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்த போது கச்சத் தீவை ஏன் மீட்கவில்லை.

1991ஆம் ஆண்டு அவர் செய்த சபதம் என்னவாயிற்று?   அதற்காக அவர் மத்திய அரசை எதிர்த்து  நடத்திய போராட்டங்கள் எத்தனை?    என்று பொன்முடி கேட்டிருக்கிறார்.  உடனே முதலமைச்சர் ஜெயலலிதா எழுந்து நின்று, கச்சத் தீவு பற்றிப் பேச கருணாநிதிக்கு அருகதை இல்லை என்று ஆவேசமாகச் சொன்னாராம்!
 
1974ஆம் ஆண்டிலேயே  ஆகஸ்ட்  21ஆம் தேதியன்று  தமிழகச் சட்டமன்றத்தில்  “கச்சத் தீவு”  பற்றி நான் முன் மொழிந்த தீர்மானம் இதோ:
 
“இந்தியாவுக்குச் சொந்தமானதும்,  தமிழ் நாட்டுக்கு நெருங்கிய  உரிமைகள் கொண்டதுமான  கச்சத் தீவுப் பிரச்சினையில்  மத்திய அரசு எடுத்துள்ள  முடிவு  பற்றி,  இந்தப் பேரவை  தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு  -  மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து  கச்சத் தீவின் மீது  இந்தியாவிற்கு  அரசுரிமை  இருக்கும் வகையில்   இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தைத் திருத்தி அமைக்க முயற்சி எடுத்து,  தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு  மதிப்பளிக்க  வேண்டுமென்று  வலியுறுத்துகிறது”
 
எனவே தி.மு.க. அப்போது வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இருக்க வில்லை.   மேலும் அந்தத் தீர்மானத்தில் நான் பேசும்போது,
 
“கச்சத் தீவு  இலங்கைக்கு  அளிக்கப்படக் கூடாது,  தமிழ் மக்கள் அதை விரும்ப மாட்டார்கள்  என்பதைப் பற்றி  பல நேரங்களில்  மத்திய  பேரரசுக்கு  தமிழக அரசு எடுத்துச் சொல்லி இருக்கிறது.   நடைபெற்ற ஒவ்வொரு பேச்சு வார்த்தையிலும்  இந்தியா கச்சத் தீவை விட்டுத் தருவது கூடாது  என்ற கருத்து தமிழக தி.மு.க.  அரசின்  சார்பாக வலியுறுத்தப் பட்டிருக்கிறது”  .............
 
தமிழக அரசை  இது போன்ற  பெரிய பிரச்சினைகளில்  மத்திய  அரசு  தன்னுடைய ஒப்புதலைக் கேட்கவில்லை;  ஆக்க பூர்வமான  முறையில்  பிரதமர்  -  முதல் அமைச்சர் இது பற்றி ஆலோசனை  நடத்துவதற்கு  வாய்ப்புக் கூறுகள்  வழங்கப்படவில்லை என்று நாம் எடுத்துச் சொல்லி யிருக்கிறோம்.
 
அனைத்துக் கட்சியினுடைய  தலைவர்கள்  அடங்கிய  கூட்டத்திலே கூட  -  எத்தனை முறை இது பற்றி பிரதமரிடத்தில்  தமிழக அரசின் சார்பிலே  ஒரு முறையீடாக  இந்த அரசு  கச்சத் தீவுப் பிரச்சினையில்   விட்டுக் கொடுக்கக் கூடாது  என்று  வலியுறுத்தியது,  பிரதமருக்கு தமிழக அரசின் சார்பில்  எழுதப்பட்ட கடிதத்திலே  எவ்வளவு ஏராளமான  ஆதாரங்களை  - கச்சத் தீவு  தமிழ்நாட்டுக்கு,  இந்தியாவுக்குத் தான் சொந்தம் என்பதை வலியுறுத்தும் வகையில்  வழங்கியது, அதைப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது என்பதையும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே எடுத்துக்காட்டி யிருக்கிறேன்.

 
அடுத்த பக்கம் பார்க்க..

அனைத்துக் கட்சித் தலைவர்களும்  கடந்த ஜூன் மாதம்  29ஆம் தேதியன்று  கோட்டையிலே கூடி  எடுத்த முடிவினை  உடனடியாக  நான்  பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.   
 
அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, பிரதமருக்குக் கடிதம் எழுதியதோடு, 24.7.1974 அன்று தி.மு. கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் கண்டனப் போராட்டங்கள் நடத்தப்பட்டு, தஞ்சை,  பாபநாசம் ஆகிய இடங்களில் நானே கண்டன கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கிறேன்.
 
பின்னர் ஒரு முறை  செய்தியாளர்கள்  “கச்சத் தீவு” பற்றி என்னைக் கேட்ட போது கூட,   கச்சத் தீவை விட்டுக் கொடுக்கும்போது,  தமிழ்நாடு  தி.மு.க. அரசு அதனை வன்மையாக மறுத்திருக்கிறது.  அப்போது இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்தார்.   அவர்கள் சமாதானம் செய்து  -  கச்சத் தீவிலே நமக்குள்ள உரிமைகளுக்கெல்லாம் வழி வகுத்து விதிகள் செய்யப்பட்டன.   அந்த உரிமைகள்  -  தேவாலயத்திற்கும், கிறித்தவ ஆலயத்திற்கும் சென்று வருவதற்கான உரிமை,  மீன்களை  காய வைப்பதற்கும்,  மீன் பிடிப்பதற்குமான உரிமை,  நம்முடைய மீனவர்கள் அங்கே  தங்கள் வலைகளை காய வைப்பதற்கான உரிமை என்று பல உரிமைகள்  நமக்கு இருந்தன.   ஆனால் நெருக்கடி நிலைக்குப் பிறகு  1976இல் நம்முடைய ஆட்சி இல்லை.  ஆளுநர் ஆட்சி தான் இருந்தது.   ஆளுநர் ஆட்சியில் அந்த விதிகள் எல்லாம் மாற்றப்பட்டு விட்டன.  அது தொடர்ந்து  இப்போதும் இருக்கிறது.   அதை நாமும் பல முறை  அந்த விதிமுறைகளை யெல்லாம்  கொண்டு வர வேண்டுமென்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.  இப்போது அதற்குரிய  நேரம் வந்து விட்டதாகவே கருதுகிறேன்”  என்று கூறியிருக்கிறேன்.   இதெல்லாம்  கச்சத் தீவினை நான் தாரை வார்த்து விட்டேன் என்பதற்கான அடையாளங்களா?
 
உச்ச நீதி மன்றத்தில் உள்ள வழக்கு பற்றியும் “டெசோ” கூட்டத்தில் நான் பேசியது பற்றியும் நேற்றையதினம் ஜெயலலிதா பேரவையில் பேசியிருக்கிறார்.
 
“கச்சத்தீவு”  பற்றிய  வழக்கில்  மத்திய அரசின் சார்பில்  உச்ச நீதி மன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் “கச்சத்தீவு எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாமல் இருந்தது;  ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கச்சத் தீவுக்கு யார் உரிமை கொண்டாடுவது  என்ற பிரச்சினை இந்தியா, இலங்கை இடையே நீடித்து வந்தது;  அதைத் தொடர்ந்து இந்திய-இலங்கைக் கடல் பகுதியில் சர்வ தேச எல்லைக் கோட்டை நிர்ணயித்த போது கச்சத் தீவு இலங்கை வரம்புக்குள் சென்று விட்டது.  அதன் பிறகு 1974ஆம் ஆண்டில் இந்தியா இலங்கை இடையே கச்சத் தீவு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.   1976ஆம் ஆண்டில் இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திலும் கச்சத்தீவு  இலங்கையின் பகுதியில் இருப்பதை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.  இந்திய எல்லைக்கோட்டுக்குள் இருந்த கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்ததாக மாயை ஏற்படுத்துவது தவறானது.” என்றெல்லாம் தெரிவித்தது. 
 
பேரவையில் பேசும்போது,  “1974இல் கலைஞர் கச்சத் தீவு  இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட செய்தியை, பத்திரிகைகளில் பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன், பதறிப் போனேன் என்கிறார்;  ஆனால் 2013இல்,  ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பே இவர் சொல்லித் தான் சில ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன என்கிறார்.   இது என்ன வேறுபாடு?” என்று கேட்டுள்ளார்.
 
15-4-2013 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “1974ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட போது, கழக அரசு முதல் நிலையிலேயே அதனைக் கடுமையாக எதிர்த்தது.  அதையும் மீறி ஒப்பந்தம்  கையெழுத்தான போது, குறைந்த பட்சம்  தமிழக மீனவர்களுக்கு  கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையும், மீனவர்களின் வலைகளை அங்கே உலர்த்திக் கொள்வதற்கான உரிமையும்  அந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டுமென்று கழக அரசு வலியுறுத்தி அந்த ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன” என்று கூறப்பட்டுள்ளது. 
 
“கச்சத் தீவு” பற்றி 15-4-2013 அன்று நடைபெற்ற “டெசோ” அமைப்பின் கூட்டத்தில்,   “கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியாகும். அது  1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி   இலங்கை அரசுக்கு இந்திய அரசால், சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும்  நாம் தெரிவித்த எதிர்ப்புகளையெல்லாம்  மீறி விட்டுக் கொடுக்கப்பட்டது.   இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்பதென்றால்,  இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 368வது பிரிவின்படி நாடாளு மன்றத்தின் பரிசீலனைக்கு வைத்து சட்டம்  இயற்றப்பட வேண்டும்.   கச்சத் தீவைப் பொறுத்தவரை அப்படி எந்தவொரு சட்டமும் இதுவரை நிறைவேற்றப்படாததால், கச்சத் தீவை இலங்கைக்கு  ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது  அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது என்பது தான் உண்மை.   எனவே  1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும்,  கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், “டெசோ” அமைப்பின் மூலம்   உச்ச நீதிமன்றத்தை அணுகுவதென  இந்தக் கூட்டம் தீர்மானிக்கின்றது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில்,  “டெசோ” அமைப்பின் சார்பில் நான் இந்திய உச்ச நீதி மன்றத்தில் மனு ஒன்றை 10-5-2013 அன்று தாக்கல் செய்திருக்கிறேன்.   உச்ச நீதி மன்றத்தில் நான் தாக்கல் செய்த இந்த மனு,  15-7-2013 அன்று தலைமை நீதிபதி அல்தமாஸ் கபீர்,  நீதிபதிகள் எப்.எம். இப்ராகிம் கலிபுல்லா,  விக்ரம் ஜித் சென் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்னிலையில்  விசாரணைக்கு வந்தது.   விசாரணையின் போது, எனது மனுவினை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள்,  மத்திய அரசுக்கு “நோட்டீஸ்” அனுப்பிட உத்தரவிட்டனர்.
 
1974ஆம் ஆண்டு இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட போதே நாடாளுமன்றத்தில் அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது.   23-7-1974 அன்று அந்த ஒப்பந்தத்தின் நகலை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த சுவரண்சிங் தாக்கல் செய்த போது, தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்ததை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தி.மு. கழகத்தின் சார்பில் இரா. செழியன் நாடாளுமன்றத்தில் கூறினார். பார்வர்டு பிளாக் கட்சியின் உறுப்பினராக இருந்த அருமை நண்பர் மூக்கையா தேவர், “எனது இராமநாதபுரம் தொகுதிக்குள் அடங்கியுள்ள இத்தீவை இலங்கைக்கு வழங்கியது அரசியல் சட்டத்துக்கு முரணானது” என்றார்.   “இலங்கையின் நட்பை பெறுவதற்காகவே ரகசிய பேரம் நடத்தி கச்சத்தீவைத் தானமாக வழங்கியுள்ளது” என்று வாஜ்பாய் பேசினார்.  இப்படிப்பட்ட கருத்துக்களை மாநிலங்களவையில் கழகத்தின் சார்பில் எஸ்.எஸ். மாரிசாமி, சோஷலிஸ்ட் கட்சி சார்பில் ராஜ்நாராயண், முஸ்லீம் லீக் சார்பில் நண்பர் அப்துல் சமது ஆகியோர் தெரிவித்தனர்.
 
கச்சத்தீவைப் பொறுத்தவரையில்,  அதனைத் தாரை வார்க்க நான் எந்தக் காலத்திலும் ஒப்புக் கொண்டதும் இல்லை;  உடன்பட்டதும் இல்லை.   தமிழகத்தின் முதல்  அமைச்சர் என்ற முறையில் என்னுடைய எதிர்ப்பை நான் அப்போதே தெரிவித்திருக்கிறேன். உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து அவர்களிடம் கருத்தறிந்திருக்கிறேன். நான் முதலமைச்சராக இருந்த காலத்தில், எந்த அளவுக்கு கச்சத் தீவினை மீண்டும் பெறுவதற்காகப் போராட முடியுமோ, வாதாட முடியுமோ அந்த அளவுக்கு போராடியிருக்கிறேன், வாதாடி இருக்கிறேன்” என்று கருணாநிதி அதில் விளக்கம் அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்