நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையகத்தில் கமல் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் மேல்மட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின் பேசிய கமல் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளும் எனவும் மேலும் வேட்பாளராக நானும் தேர்தலில் நிற்கிறேன் எனவும் அறிவித்தார்.
காங்கிரஸுடன் கூட்டணி வைக்கும் திட்டத்தில் இருந்த கமல் காங்கிரஸ் திமுக கூட்டணி உறுதியானதை அடுத்து தீவிர ஆலோசனையில் இருந்ததாக தெரிகிறது. தனியாக போட்டியிடுவது நல்லதில்லை என்ற அறிவுரைகள் அவருக்கு நெருங்கிய வட்டாரத்தின் மூலம் வந்திருக்கிறது. தமிழகத்தில் பாஜக வோடு கூட்டணி அமைப்பது தற்கொலைக்கௌ சமம் என்றும் அவருக்கு சொல்லப்பட்டிருக்கிறது. எனவே காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்தாலும் திமுக காங்கிரஸுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் உள்பங்கீடு பெற்றுக்கொண்டு காங்கிரஸோடு மட்டும் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் தனக்கு ராமநாதபுரம் தொகுதியில் சீட் வேண்டும் எனவும் காங்கிரஸுக்கு தெரியப் படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. கமல்ஹாசனின் சொந்த ஊர் என்பதால் அங்கு அவருக்கு மக்கள் செல்வாக்கு கிடைக்கும் என்பதால் காங்கிரஸூம் இந்த முடிவுக்கு தலையசைத்து விட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.