”பயப்படுறியா குமாரு??”..கமலின் இடைத்தேர்தல் பின்வாங்கல் ஏன்??

Arun Prasath

திங்கள், 23 செப்டம்பர் 2019 (08:48 IST)
விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கமல்ஹாசன் அறிவித்திருந்ததை தொடர்ந்து, அக்கட்சியின் தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் 36 தொகுதிகளிலும், அதனுடன் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. “டார்ச் லைட்” சின்னத்துடன் களமிறங்கிய அக்கட்சி, சுமார் 3.72 வாக்குகளை மட்டுமே பெற்றது.

இதனையடுத்து வேலூர் பாராளுமன்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கையில், அக்கட்சி வேலூர் இடைத்தேர்தலை சந்திக்காது என அறிவித்தது. இது அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

இந்நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என கமல்ஹாசன் அறிவித்திருப்பது அக்கட்சி தொண்டர்களுக்கு மீண்டும் பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இது குறித்து காரணமாக அவர், நேற்று வெளியிட்ட அறிக்கையில், தலைப்பாகைகளை தக்கவைத்து கொள்ளும் எண்ணத்துடன் நடக்கும் இந்த ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என கூறியுள்ளார்.

தான் கட்சி தொடங்கியதிலிருந்து ஊழல் ஆட்சிக்கு எதிராக போர் தொடுப்போம் என கூறி வந்த கமல்ஹாசன், தற்போது அதே காரணத்துக்காக இந்த நாடகத்தில் பங்கேற்க மாட்டேன் என கூறியுள்ளது பெரும் முரணாக இருப்பதாக பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

மேலும் சினிமா படப்பிடிப்புகளிலும், பிக் பாஸ் நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தும் கமல்ஹாசன், சமூக பிரச்சனைகள் குறித்து ஆங்காங்கே கருத்து தெரிவித்தாலும், கட்சி பணிகளில் தற்போது தீவிர களத்தில் இயங்கவில்லை எனவும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுகின்றன.

”மக்களை நம்பிதான் கட்சி ஆரம்பித்துள்ளேன்” என பல பேட்டிகளில் கூறி வரும் கமல்ஹாசன், கடந்த பாராளுமன்ற தேர்தலின் படு தோல்வியின் தாக்கத்தால் தான், இடைத்தேர்தலை கண்டு பயப்படுகிறாரா? எனவும் கமலின் அரசியல் பிரவேசத்தை விமர்சிப்பவர்கள் கேள்வி எழுப்பிவருவது குறிப்பிடத்தக்கது.

விக்கிரபாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டோம் என டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கட்சி கூறிவுள்ளதும் கூடுதல் செய்தி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்