எழுத்தாளராக கலைஞர் கருணாநிதி!

புதன், 8 ஆகஸ்ட் 2018 (16:54 IST)
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கலைத்துறையில் தனது எழுத்து மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

 
தமிழ் மொழிக்கு இவர் ஆற்றிய பங்கு மிகவும் பெரிது. அரசியல்வாதியாகும் முன் தன் எழுத்துக்களால் கட்டிப்போட்டவர். சினிமா துறையில் வசனம், திரைக்கதை, கதை என்று எழுதி அசத்தியவர். 
 
மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர். மூத்த அரசியல்வாதி. இவர் எழுதிய நாடகங்கள் பெரும் சிறப்பு பெற்றது. பெரும்பாலும் இவரது எழுத்துக்கள் சமூக அக்கறை கொண்டவையாகவே இருந்தது.
 
கலைஞர் கருணாநிதி:
 
கருணாநிதி எழுதி முதன் முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம், 'பழனியப்பன்'. திருவாரூர் பேபி டாக்கீஸில் 1944ல் அரங்கற்றப்பட்டது.
 
50களிலிருந்து 70கள் வரை தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய சிவாஜி கணேசன், எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் மிகப் பெரிய வெற்றிப்படங்களை அளித்தவர் கருணாநிதி. சிவாஜிக்கு பராசக்தி, மனோகரா. எம்.ஜி.ஆருக்கு மந்திரி குமாரி, மலைக்கள்ளன்.
 
கருணாநிதி முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம் 1947ல் வெளியான ராஜகுமாரி. இந்தப் படம்தான் முதன் முதலில் எம்.ஜி.ஆர் முன்னணி வேடத்தில் நடித்த படம்.
 
1947ல் வெளியான ராஜகுமாரி தொடங்கி, 2011ல் வெளியான பொன்னர் - சங்கர் வரை சுமார் 64 வருடங்கள் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார் கருணாநிதி.
 
பராசக்தி படம் வெளிவந்தபோது, அந்தப் படத்தை கிண்டல் செய்து ஒரு இதழில் பரப்பிரம்மம் என்ற பெயரில் கார்ட்டூன் வெளியிடவே, அதே பெயரில் ஒரு நாடகத்தை எழுதி மாநிலம் முழுவதும் நடத்தினார் கருணாநிதி.
 
கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ஸ்ரீ ராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான். அந்தத் தொடருக்கு அவர் எழுத ஆரம்பித்தபோது அவரது வயது 92. எழுதிவந்தபோதே அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.
 
கருணாநிதி பத்து சமூக நாவல்களையும் 6 சரித்திர நாவல்களையும் எழுதியிருக்கிறார்.
 
21 நாடகங்களை கருணாநிதி எழுதியிருக்கிறார். 1957ல் தி.மு.கவுக்குக் கிடைத்த உதயசூரியன் சின்னத்தைப் பிரபலபடுத்துவதற்காக உதயசூரியன் என்ற நாடகத்தை எழுதினார்.
 
இனியவை 20 என்ற பெயரில் பயண நூல் ஒன்றையும் கருணாநிதி எழுதியிருக்கிறார்.
 
கருணாநிதி பணியாற்றிய படங்களின் எண்ணிக்கை 69.
 
கருணாநிதி கதை - வசனம் எழுதி எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் எண்ணிக்கை 9.
 
கருணாநிதியை ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் 'ஆண்டவரே' என்று அழைத்திருக்கிறார்.
 
கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதா தான். கருணாநிதி எழுதிய, 'தூக்குமேடை' என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை வழங்கினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்