கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற ஹெச்.வசந்தகுமார், தனது நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததால் இப்போது அந்த தொகுதி காலியாக உள்ளது. இதுகுறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலில்’ இந்த தொகுதியை திமுகவுக்குக் காங்கிரஸூக்கு விட்டுத்தந்தால் நாங்கள் எளிதாக வெற்றிப் பெற முடியும்’ எனத் தெரிவித்தார். அவர் பேசியபோது காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரும் அங்கு இருந்தார்.
இதனால் நாங்குநேரி தொகுதி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து நேற்று காங்கிரஸ் தமிழகத் தலைவர் கே எஸ் அழகிரி நேற்று பதிலளித்தார். அதில் ‘நாங்குநேரி தொகுதியைத் திமுகவுக்கு விட்டுத் தர வேண்டும் என கேட்ட உதயநிதி, திருநாவுக்கரசர் கோபித்துக்கொள்ளக் கூடாது என்றும் கூறியிருக்கிறார். அதை அவர்கள் இருவருக்கும் நடந்த உரையாடலாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, இரு கட்சிகளுக்கு இடையே நடந்த உரையாடலாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மக்களவைத் தேர்தலில் சிறப்பாக தொகுதிகளைப் பிரித்துக்கொண்டதைப் போல உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தலிலும் தொகுதிப்பங்கீடு செய்துகொள்வோம்’ எனத் தெரிவித்துள்ளார்.