கடந்த சில மாதங்களுக்கு முன் 'கொலையுதிர்க்காலம்' படத்தின் புரமோஷன் விழா ஒன்றில் நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து "பார்த்தவுடனே கும்பிடறவங்களையும், பார்த்தவுடனே கூப்பிடுறவங்களையும் கடவுள் வேடத்தில் நடிக்க வைக்குறாங்க' என சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராதாரவியின் அருவருப்பான அந்த பேச்சுக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். அவர் மீது நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விக்னேஷ் சிவன், சின்மயி உள்பட பலர் வலியுறுத்தினர். இதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருமாறியதை அடுத்து திமுகவில் இருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதையடுத்து மீண்டும் திமுக தலைமை தன்னை அழைக்கும் என எதிர்பார்த்த ராதாரவிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனால் ராதாரவி அதிரடியாக அதிமுகவில் இணைந்தார். பின்னர் தான் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில் ‘ நயன்தாராவுக்கும் கட்சியில் உள்ள உறவு தெரியாமல் பேசியதால்தான் நான் திமுகவில் இருந்து நீக்கப்பட்டேன். என் நீக்கத்துக்கும் ஸ்டாலினுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவர் மேல் எனக்கு எப்போதும் மரியாதை உண்டு.’ எனத் தெரிவித்துள்ளார்.