நீதிமன்றங்களும், தேர்தல் ஆணையமும் ஜெயலலிதாவுக்கு பயந்து செயல்படுகின்றன: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதன், 27 மே 2015 (16:33 IST)
நீதிமன்றங்களும், தேர்தல் ஆணையமும் ஜெயலலிதாவுக்கு பயந்து செயல்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.
 

 
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 52-வது நினைவு தினத்தையொட்டி சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு குமரிஅனந்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர் எம்.எல்.ஏ., ஒருவர் பதவி விலகி 10 நாட்களிலேயே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது தமிழக வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என குறிப்பிட்டார்.
 
இடைத்தேர்தலில் அதிகார பலமும், பண பலமுமே ஆதிக்கம் செலுத்தும் என்பதால் ஆர்.கே.நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டாம் என்பது தமது கருத்து என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
 
ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்ய காலதாமதம் ஆவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், 90 நாட்கள் அவகாசம் உள்ளதால் இவ்விகாரத்தில் தாமதம் ஏதும் இல்லையென்று விளக்கம் அளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்