ஜெயலலிதா தாக்கப்பட்டு பாதி உயிருடன் அப்பல்லோவுக்கு கொண்டுவரப்பட்டார்: பரபரப்பு தகவல்!
திங்கள், 27 பிப்ரவரி 2017 (11:50 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் தினமும் எழுப்பப்படுகிறது. அதில் அவர் போயஸ் கார்டனில் தாக்கப்பட்டு பின்னர் தான் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் என்ற செய்தி நீண்ட நாட்களாக பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சிகள், அதிமுகவின் ஓபிஎஸ் அணி என பலரும் கூறுகின்றனர். இதனால் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் அவர்கள்.
இதனையடுத்து ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான பொன்னையன் கூறியுள்ள பரபரப்பு தகவல் ஒன்று பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா போயஸ் கார்டனிலேயே தாக்கப்பட்டு, பாதி உயிருடன் தான் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் என பொன்னையன் கூறியுள்ளார்.
சென்னை கிரீன்வேய்ஸ் சாலையில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீட்டில் நேற்று முக்கிய நிர்வாகிகள் பலர் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசினார்.
அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது யாரையும் அவரை பார்க்க அனுமதிக்கவில்லை. மூத்த நிர்வாகிகள், முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், டாக்டர் மைத்ரேயன் உள்ளிட்ட யாரையும் அவரை பார்க்க அனுமதிக்கவில்லை. சசிகலா மட்டும் அவருடன் இருந்தார்.
ஜெயலலிதாவுக்கு நோய்தொற்று இருந்ததால் அனுமதிக்கவில்லை என்கிறார்கள். அப்படியென்றால் சசிகலாவுக்கு நோய்தொற்று ஏன் ஏற்படவில்லை. ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் முன்பே போயஸ் கார்டன் வீட்டில் தாக்கப்பட்டுள்ளார். மயக்கமடைந்த நிலையில் பாதி உயிருடன் ஜெயலலிதா அப்பல்லோவிற்கு கொண்டு வரப்பட்டார் என கூறி அதிர்ச்சி அளித்தார் பொன்னையன்.