திடீர் திருப்பம்: ஜெ. அண்ணன் மகன் தீபக் ஓபிஎஸ்-க்கு ஆதரவு!

வியாழன், 23 பிப்ரவரி 2017 (17:25 IST)
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக சசிகலாவுக்கு இதுவரை ஆதரவு தெரிவித்து வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் இன்று திடீரென ஓபிஎஸ் பக்கம் சாய்ந்து அவருக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.


 
 
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சசிகலாவை எதிர்த்து வந்தபோது, சசிகலாவுக்கு பக்கபலமாக இருந்து அவருக்கு தனது முழுமையான ஆதரவு வழங்கி வந்தவர் தீபாவின் தம்பி தீபக். இரண்டு தினங்களுக்கு முன்னர் சசிகலாவை சிறையில் கூட போய் சந்தித்துவிட்டு வந்து அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் திடீர் திருப்பமாக அவர் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக மாறியுள்ளார். ஆனாலும் சசிகலாவை ஜெயலலிதாவிற்கு சமமாக மதிக்கிறேன் எனவும் அவர் குடும்பத்திலிருந்து வேறு யாரும் கட்சிக்கோ, ஆட்சிக்கோ வருவதை நானோ கட்சி தொண்டர்களோ ஏற்க மாட்டார்கள் என கூறினார்.
 
மேலும் அவர் கூறியபோது ஜெயலலிதா அத்தை உடல் நலம் இல்லாத போது தனது துறை சார்ந்த பணியை ஒபிஎஸ்சிடம் தான் வழங்கினார். கட்சியில் எந்த பதவியும் வகிக்க தகுதியில்லாதவர் தினகரன்.
 
ஒபிஎஸ் அண்ணன் மீண்டும் கட்சிக்கு வரவேண்டும். கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமை ஏற்க ஜெயலலிதாவால் ஏற்கபட்ட ஒபிஎஸ் தான் வர வேண்டும் என நான் மட்டுமல்ல, கட்சி தொண்டர்கள் அனைவரும் விரும்புகின்றனர். அத்தைக்கான அபராத தொகையை நானே செலுத்துவேன். எனக்கும் என் சகோதரி தீபாவுக்கும் எந்த முரணுமில்லை. தினகரன் தலைமையை ஏற்கமாட்டோம் என தீபக் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்