தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் காவலில் ஈடுபட்டிருந்த காவலாளியின் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் நேற்று இரவு விபத்தில் சிக்கி பலியானார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம் பகதூர் கத்தியால் குத்தப்பட்டு மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இந்த கொலை வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் தான் மூளையாக செயல்பட்டார் எனபது காவல்துறையின் தீவிர விசாரணையில் தெரியவந்தது.
ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி சசிகலாவாக இருந்தாலும் சரி கொடநாட்டுக்கு வந்தால் கனகராஜ் தான் கார் டிரைவராக செல்வார். கார் ஓட்டுவதில் அவ்வளவு திறைமைசாலி. இவருக்கு கொடநாட்டு எஸ்டேட் பற்றிய அனைத்து விபரங்களும் அத்துப்படி.
கொடநாடு எஸ்டேட்டில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை திருட கனகராஜுக்கு அவரது நண்பர் கேராளா திருச்சூரை சேர்ந்த சயான் என்பவர் உதவி செய்துள்ளார். சயான் கோவையில் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கனகராஜ் வகுத்து கொடுத்த திட்டத்தை கூலிப்படையின் உதவியுடன் சயான் செயல்படுத்தியதாக கூறப்படுகிறது.
எனவே காவல்துறை இவர்கள் இருவரையும் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். போலீசாரின் பிடியில் இருந்து தப்பி தப்பி ஓடிய கனகராஜ் இறுதியில் போலீஸ் தன்னை நெருங்குவதை உணர்ந்து சேலத்தில் நேற்று இரவு போலீசில் சரணடைய முடிவு செய்தார்.
அதற்காக நண்பர் ஒருவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கிக்கொண்டு சரணடைய சென்றுள்ளார் கனகராஜ். அப்போது வேகமாக வந்த சொகுசுகார் ஒன்று கனகராஜின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கனகராஜுக்கு கொடுநாட்டு விபரங்கள் அனைத்தும் தெரியும் என்பதால் அவர் சரணடைய இருந்ததால் அவரை திட்டமிட்டு யாராவது கார் ஏற்றி கொன்றார்களா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் மற்றொரு குற்றவாளியான சயனும் கார்விபத்தில் இன்று சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை மேலும் வலுபெற செய்கிறது.
இதனையடுத்து போலீசார் இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். கனகராஜின் மரணம் கொலையாக இருக்கத்தான் வாய்ப்பு அதிகம் என பரவலாக பேசப்படுகிறது.