4 வாரத்தில் ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவிப்பு

வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (16:29 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்னும் நான்கு வாரத்தில் வர இருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.


 
 
இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ் விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தது. இதனையடுத்து இந்த தீர்ப்பின் தேதி அறிவிக்கப்பட்டு எப்பொழுது வேண்டுமானாலும் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்ற சூழல் உருவானது.
 
முன்னதாக கர்நாடகா அரசு வழக்கறிஞராக பிவி ஆச்சார்யா சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரான போது அவருக்கு அழுத்தங்கள் இருந்ததாக தம்முடைய சுயசரிதையில் கூறியிருந்தார். எனவே, இந்த வழக்கில் ஆச்சார்யா நேர்மையான முறையில் ஆஜராகி செயல்பட்டாரா என்பதையும் விசாரிக்க வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த பி.ரத்னம் என்பவர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
 
இதனை இன்று விசாரித்த நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக கூறினார்கள். ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் அடுத்த 4 வாரத்தில் தீர்ப்பு வெளியிடப்பட உள்ளதால், அதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்