ஜெயலலிதா 54 வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை - ஸ்டாலின்

ஞாயிறு, 8 மே 2016 (18:56 IST)
2011–ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா 54 வாக்குறுதிகளை அளித்தார். இவற்றில் எதையும் நிறைவேற்றவில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


 
 
தமிழகத்தில் ஆர்.கே.நகர் உள்பட 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோற்கப் போவது உறுதி என்று தஞ்சையில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
 
இது குறித்து கூறியுள்ள ஸ்டாலின், "ஜெயலலிதா நீலகிரி மாவட்டத்துக்கு மட்டும் ஓய்வு எடுக்க அடிக்கடி சென்றார். மக்களை பற்றி ஜெயலலிதா கவலைப்படவில்லை. மக்களை பற்றி சிந்திக்கவே இல்லை. தமிழகத்தில் ஆட்சி நடக்கவில்லை. இது காட்சி. காணொலி காட்சி
 
இந்த ஆட்சியில் தமிழக மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இப்போது சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வீதி, வீதியாக ஜெயலலிதா சென்று கொண்டு இருக்கிறார். ஆர்.கே.நகர் உள்பட தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோற்கப்போவது உறுதி.
 
பாராளுமன்றத்தில் 37 உறுப்பினர்களும், மேலவையில் 12 உறுப்பினர்களும் என 49 எம்.பி.க்கள் இருந்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முட்டுக்கட்டை போடுவதின் மர்மம் என்ன?
 
ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு மேல்முறையீடு வழக்கு கத்தி தலைக்கு மேல் தொங்கி கொண்டு இருக்கிறது. அந்த வழக்கில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ளவே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
2006–ம் ஆண்டு தேர்தலில் திமுக அறிக்கை ஹீரோவாக இருந்தது. 2016–ல் சூப்பர் ஹீரோவாக இருக்கிறது. 2011–ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா 54 வாக்குறுதிகளை அளித்தார். இவற்றில் எதையும் நிறைவேற்றவில்லை.
 
சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்த எந்த உறுதிமொழியையும் நிறைவேற்றவில்லை. இப்போது திமுக தேர்தல் அறிக்கையில் அதிமுக ஸ்டிக்கரை ஒட்டி வெளியிட்டுள்ளனர்” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்