சென்னை தலைமை செயலகத்தில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றி பார்ப்பதற்காக, அடையாறில் உள்ள சிஷ்யா பள்ளி மாணவ-மாணவிகள் சென்றிருந்தனர். அப்போது தலைமை செயலகத்துக்கு வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மாணவ-மாணவிகளை தனது அறைக்கு வரவழைத்து பேசினார். அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி உரையாடினார்.
அப்பொது மாணவ-மாணவிகள் மத்தியில் ஜெயலலிதா பேசுகையில், “உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த ஆச்சரியத்தையும், எதிர்பாராத மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. புனித ஜார்ஜ் கோட்டையை வந்து சுற்றிப் பார்த்திருப்பதன் மூலம், உங்களுக்கு பயனுள்ள தகவல்களும் கல்வி சார்ந்த அறிவும் கிடைத்திருக்கும். இளம் வயதில் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இதர கலை நிகழ்வுகளிலும் தங்களை ஈடுபடுத்தி கொள்ளலாம். அதற்காக கணினி, தொலைக்காட்சி, வீடியோ கேம்ஸ் போன்றவற்றில் நேரத்தை வீணாக செலவிடக் கூடாது. உடல் பலம் பெறும் வகையில் விளையாட்டுகளிலும் ஈடுபட வேண்டும். எந்த துறைகளை தேர்வு செய்கிறீர்களோ அதில் சிறப்புற்று விளங்குவீர்கள். உங்களுக்கு மிகச்சிறந்த எதிர்காலம் அமையும். எந்த நேரத்தில் உதவிகள் தேவைப்பட்டாலும் அதனை செய்வதற்கு தமிழக அரசு தயாராக இருக்கிறது. மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கே ஆட்சியாளர்கள் இருக்கிறோம். நன்கு படிக்கக் கூடிய இளம் தலைமுறையினரை சந்தித்து உரையாடும் வாய்ப்பினை பெறுவேன் என்று நினைக்கவில்லை. உங்களின் மிகச் சிறந்த எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்.” என்றார். பிறகு, மாணவ-மாணவிகள் ஜெயலலிதாவுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.