ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு பிடி இறுகுகிறது: இறுதி விசாரணை பிப்ரவரி 2 முதல்

வெள்ளி, 8 ஜனவரி 2016 (12:59 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு விசாரணை வரும் 8ஆம் நடைபெறாது என உச்ச நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்த நிலையில் இறுதி விசாரணை எப்போது வரும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது.


 
 
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் இறுதி விசாரணை வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் நடைபெறும் என உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
 
4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனி நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, விசாரணை முடிவில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்து கீழ்நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்தார்.
 
பின்னர், 4 பேரின் விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தது. இதே போல் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பிலும் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.
 
இந்நிலையில், கடந்த நவம்பர் 23ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மேல் முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு வந்தன.
 
அப்போது நீதிபதிகள், ’வழக்கின் விசாரணை தொடங்குவதற்கு முன்பாக இரு தரப்பினரும் இறுதிவாதம் தொடர்பான தொகுப்பை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின் மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கும்’ என தெரிவித்து, வழக்கை ஜனவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 
உச்ச நீதிமன்றத்தில் அதிகப்படியான முக்கிய வழக்குகள் தேங்கி கிடப்பதால் நீதிபதிகளுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. எனவே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு வரும் 8-ம் தேதி விசாரிக்கப்பட மாட்டாது என உச்சநீதிமன்ற பதிவுத் துறை அலுவலகம் புதன் கிழமை வெளியிட்டது.
 
இந்நிலையில் பிப்ரவரி 2 முதல் இறுதி விசாரணை தொடங்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 2 ஆம் தேதிக்கு முன் மனுதாரகள் பதில் அளிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை பிப்ரவரி 2 முதல் தினமும் விசாரிப்பது பற்றி பிற வழக்குகளின் அடிப்படையில் பின்னர் முடிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்