28 வருடங்களாக எம்.ஜி.ஆர், ஜெ. படங்களை விற்றவர் தொழிலுக்கே முழுக்கு..
சனி, 7 ஜனவரி 2017 (15:22 IST)
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் வாசலில் பல வருடங்களாக மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்களை விற்பனை செய்து வந்த தம்பதி, சசிகலாவின் படத்தை விற்பனை செய்ய விருப்பம் இல்லாமல் தங்கள் தொழிலுக்கே முழுக்கு போட்டு விட்டதாக செய்திகள் வெளியானது.
எந்த கட்சியினரை சார்ந்தவராக இருந்தாலும், தங்களின் அரசியல் தலைவர்களின் உருவப்படத்தை தன்னுடைய சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொள்வது என்பது தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் என அனைவருக்கும் பொருந்தும். பெண்கள் தங்கள் சேலையில் குத்திக் கொள்வார்கள். அதிமுக என்றால் ஜெயலலிதா, திமுக என்றால் கருணாநிதி. கடந்த பல வருடங்களாக இதில் மாற்றம் எதுவுமில்லை.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அன்பழகன், லலிதா ஆகிய தம்பதி இருவரும், கடந்த 28 வருடங்களாக எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலித புகைப்படங்கள், அவர்களது உருவம் பதித்த கீ செயின்கள் ஆகியவற்றை தொண்டர்களுக்கு விற்பனை செய்து வந்தனர்.
ஜெயலலிதாவின் மரணம் அவர்களை வெகுவாக பாதித்தது. மேலும், சசிகலா தலைமையில் அதிமுக செயல்படுவதால், அவரின் புகைப்படங்களை அதிமுகவினர் வாங்கி தங்கள் சட்டைப் பையில் வைத்து வருகின்றனர். ஆனால், சசிகலாவின் புகைப்படத்தை விற்பனை செய்வதற்கு உடன்பாடு இல்லாத அவர்கள், அந்த தொழிலுக்கு முழுக்கு போட்டுவிட்டதாக சமீபத்தில் சில செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர்.
மேலும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் மீது கொண்டிருந்த பற்று காரணமாக, இத்தனை வருடங்களாய் இந்த தொழிலை செய்து வந்தோம். அதை வைத்துதான் எங்கள் வாழ்க்கையை ஓட்டி வந்தோம். அதில் ஒரு நிம்மதி இருந்தது. ஆனால், சசிகலாவின் படங்களை விற்பனை செய்ய எங்களுக்கு மனம் வரவில்லை. எனவே இந்த தொழிலை விட்ட விலக முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளனர்.