ஜெ.வின் நினைவு மண்டபத்தில் இரட்டை இலை? - தொடரும் சர்ச்சை
செவ்வாய், 8 மே 2018 (10:57 IST)
மக்கள் வரிப்பணத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவரது நினைவிடத்தில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு அதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அந்த நினைவு மண்டபத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று இந்த நினைவிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இதுபற்றி மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஊழலில் திளைக்கும் மாநிலம் என்ற தீராப்பழியை தமிழகத்திற்கு ஏற்படுத்திக் கொடுத்த ஒருவருக்கு நினைவு மண்டபம் அமைத்து கவுரவப்படுத்துவது ஊழலுக்கு மணிமகுடம் சூட்டுவதற்கு ஒப்பானது ஆகும்.எத்தனை வேள்விகள் நடத்தினாலும், எத்தனை பட்டுத்துணிகளைப் போட்டு மூடி வைத்தாலும் நினைவு மண்டபம் கட்டப்படும் ஜெயலலிதாவின் ஊழல்களையும், ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான பினாமி அரசின் ஊழல்களையும் மறைக்க முடியாது; அதனால் ஏற்பட்ட பாவங்களை கழுவ முடியாது; மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள வெறுப்பை அழிக்க முடியாது.
ஜெயலலிதா மட்டும் இப்போது உயிருடன் இருந்திருந்தால் பெங்களுர் பரப்பண அக்கிரகார சிறையில் சசிகலாவுடன் அடைக்கப்பட்டிருந்திருப்பார். இந்திய வரலாற்றில் எவரும் செலுத்தாத வகையில் ரூ.100 கோடி அபராதம் செலுத்தியிருந்திருப்பார். அப்படிப்பட்டவருக்கு ரூ.50 கோடியில் நினைவிடம் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜெயலலிதாவின் ஊழல் சின்னமாகவே பொதுமக்கள் இதை பார்ப்பார்கள்.
ஜெயலலிதாவின் நினைவிடம் நேராக பார்க்க பீனிக்ஸ் பறவை போன்றும், கழுகுப் பார்வையில் பார்க்க இரட்டை இலை சின்னம் போன்றும் காட்சியளிக்கிறது. ஏற்கனவே எம்.ஜி.ஆர் நினைவிடத்தின் வளாகத்தில் இரட்டை இலை சின்னம் வடிவில் நுழைவாயில் அமைக்கப்பட்டது. அதுகுறித்த சர்ச்சை எழுந்த போது அது ‘குதிரை றெக்கை’யின் நிழல் என்று விஞ்ஞானப்பூர்வமான விளக்கம் அளித்து தமிழக அரசு தப்பித்தது. அதனால் ஏற்பட்ட துணிச்சல் காரணமாக இப்போது ஜெயலலிதா நினைவு மண்டபத்திலும் இரட்டை இலை திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. மக்களின் வரிப்பணத்தில் ஊழல்வாதி ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதையும், அதில் இரட்டை இலையை அமைத்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதையும் அனுமதிக்க முடியாது.
முதலமைச்சராகவே பதவி வகித்திருந்தாலும் கூட ஊழல்வாதிக்கு, ஊழல் செய்ததற்காக தண்டிக்கப் பட்டவருக்கு நினைவிடம் அமைப்பதை எந்த சட்டமும், நீதிமன்றமும் அனுமதிப்பதில்லை. சட்டப்பேரவை மாடத்தில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதைக் கூட சென்னை உயர்நீதிமன்றம் ஆதரிக்கவில்லை; மாறாக சட்டப்பேரவைத் தலைவரின் முடிவில் தலையிட விரும்பவில்லை என்று தான் கூறியிருந்தது. எனவே, வரிப்பணத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்பம் கட்டும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.