மக்கள் தூங்கும்போது ஏரியை திறந்து விடுவதா? : சீமான் ஆவேசம்

சனி, 12 டிசம்பர் 2015 (11:33 IST)
சென்னையில் மக்கள் உறங்கி கொண்டிருக்கும் போது, நள்ளிரவில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஏரியை எப்படி திறந்துவிடலாம்? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைபாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.


 
 
சென்னையில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை சீமான் வழங்கி வருகிறார். அண்ணாநகர், மதுரவாயல் போன்ற பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளையும், மக்களையும் பார்வையிட்டர்.
 
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசும் போது “ ஏரிக்கரை மற்றும் ஆறுகளின் ஒரங்களில் வசித்த மக்கள்தான் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு காரணம் ஆறுகளை சுருக்கி அங்கு வீடுகள் கட்டியதுதான். முக்கியமாக அரசின் அலட்சியத்தால்தான் இவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது.
 
ஏரியில் நீரை திறந்து விடுவது பற்றி மக்களுக்கு முன் கூட்டியே தெரிய படுத்தியிருந்தால், அவர்கள் தங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை பாதுகாத்து இருப்பார்கள். ஒவ்வொரு ஏரிக்கும் ஒரு கண்காணிப்பு அதிகார் இருப்பார் இல்லையா? அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? நீரை திறப்பதற்கு முன் தீயணைப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினரை அனுப்பி மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவிட்டு அதன் பின்னே நீரை திறந்து விட்டிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது இவ்வளவு நீரை திறந்து விடுவது எவ்வளவு அலட்சியமான செயல்?    
 
மக்களுடைய வருத்தமெல்லாம், தங்களை சந்திக்க யாருமே வரவில்லை என்பதுதான். ஓட்டு கேட்கும் போது அரசியல் வாதிகள், நடுத்தெருவில் நிற்கும்போது வரவில்லையே என்பதுதான் அவர்களின் ஆதங்கமும் மனவேதனையும்.
 
ஏராளமானோர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். இப்போது அவர்கள் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். மக்கள் வசிக்கும் சாலைகளெல்லாம் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. அதை சுத்தம் செய்தாலே போதும். அதுதான் அவர்கள் வேண்டுவதும்.
 
எனவே இதில் அரசியல் பாரபட்சம் இன்றி மத்திய மாநில அரசு மக்களுக்கு உதவ வேண்டும்” என்று சீமான் கேட்டுக்கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்