போயஸ் கார்டனில் உள்ள பழைய ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், தினகரன் வீடு, நடராஜன் வீடு மற்றும் 150க்கும் மேற்பட்ட சசிகலா உறவினர்களின் வீடுகளில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெங்களூர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், சசிகலாவிற்கு சொந்தமான மிடாஸ் மது ஆலையிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல், சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கலைக் கல்லூரியிலும் அதிகாரிகள் 4 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, திவாகரனின் ஆதரவாளர்கள் அவரின் வீட்டிற்கு முன்பு திரண்டுள்ளனர்.
10 குழுமங்களுக்கு சொந்தமான போலி நிறுவனங்களை குறி வைத்து இந்த சோதனை செய்யப்படுவதாகவும், அதில் 3 குழுமங்கள் சசிகலாவிற்கு சொந்தமானவை எனவும் அதிகாரிகள் கூறியதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதேபோல், கருப்பு பண ஒழிப்பின் ஒரு பகுதியாகவே இந்த சோதனை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.