இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ள இளைஞர்கள் பயன்பெறும் விதமாக 3 மாத இயற்கை விவசாய களப் பயிற்சியை ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் இலவசமாக வழங்க உள்ளது. இப்பயிற்சியில் பங்கேற்கும் இளைஞர்கள் கோவை செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் தங்கி விவசாயத்தின் அனைத்து அடிப்படை அம்சங்களையும் நேரிடையாக கற்றுக்கொள்ள முடியும்.
இது தொடர்பாக மண் காப்போம் இயக்கத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் கூறுகையில், “தற்போதைய சூழலில், இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு படிப்படியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, படித்த இளைஞர்கள் அதிகளவில் இயற்கை விவசாயம் செய்ய தொடங்கி உள்ளனர். அதேசமயம், முறையான வழிகாட்டுதல் மற்றும் அனுபவம் இல்லாத காரணத்தால் அவர்களில் பெரும்பாலானோர் தோல்வியை சந்திக்கும் சூழலும் நிலவுகிறது.
எனவே, இதற்கு தீர்வு காணும் விதமாக, 3 மாத இயற்கை விவசாய களப் பயிற்சியை நாங்கள் வடிவமைத்துள்ளோம். இப்பயிற்சியில் இயற்கை விவசாயத்திற்கு ஆதாரமாக இருக்கும் நாட்டு மாடுகளை பராமரிப்பது, அவற்றில் இருந்து கிடைக்கும் சாணம் மற்றும் கோமியத்தில் இருந்து பல்வேறு விதமான இயற்கை இடுப்பொருட்களை தயாரித்து பயிர்களுக்கு பயன்படுத்துவது, எளிய வேளாண் கருவிகளை பயன்படுத்துவது, கீரை, காய்கறிகள், கிழங்குகள், நெல் ரகங்கள் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பயிர்களை விதைப்பதில் தொடங்கி அறுவடை செய்வது வரை பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை எங்களுடைய வேளாண் பயிற்றுநர்கள், வல்லுனர்கள் உடன் இருந்து கற்றுக்கொடுப்பார்கள்.
35 ஏக்கர் பரந்து விரிந்துள்ள எங்களுடைய மாதிரி பண்ணையில் மேற்கொள்ளப்படும் உழவில்லா வேளாண்மை, மண் வளப் மேம்பாட்டு பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பங்கேற்பாளர்கள் நேரில் பார்த்து அனுபவ ரீதியாக கற்றுக்கொள்ள முடியும். மேலும், இப்பயிற்சியின் ஒரு அங்கமாக, முன்னோடி விவசாயிகளின் பண்ணைகளை பார்வையிடும் பயணமும் இடம்பெறும். இதுபோன்ற விஷயங்கள் இயற்கை விவசாயத்தை வெற்றிகரமாக செய்வதற்கு உறுதுணையாக இருக்கும். இப்பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிக்காட்டுதலும் வழங்கப்படும். உணவு மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும்.