அதிமுகவில் திவாகரனுக்கு உரிமை இல்லையா? - கொதித்த அமைச்சர்

செவ்வாய், 17 ஜனவரி 2017 (13:31 IST)
அமைச்சர் கே.பி.முனுசாமி யாரிடமோ விலை போய்விட்டார் என்று குற்றம்சாட்டுகிறேன். அவர் வேறு பாதை அமைத்துவிட்டார் என்று தெரிகிறது என தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.


 

நடராஜன் அதிமுகவை கட்டிக் காத்தார்:

தஞ்சாவூரில் நடராஜன் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் திருவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திவாகரன், ”புரட்சித் தலைவருக்கு பிறகு அதிமுகவை கட்டிக்காத்ததில் மிகப்பெரிய பங்கு நமக்கு உண்டு, அதுவும் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தினருக்கு உண்டு. அதில் மிகப்பெரிய பங்கு முனைவர் ம. நடராஜனுக்கு உண்டு” என்று கூறியிருந்தார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

கே.பி.முனுசாமி அதிரடி:

இதனையடுத்து கிருஷ்ணகிரியில் தமிழக முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடத்தில் பேசுகையில், ”அதிமுக இரண்டாக உடைந்த போது எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மையார், அவராக ஜெயலலிதாவிடம் இந்த இயக்கத்திற்கு தலைமை ஏற்றுக் கொள்ளுங்கள் என சொல்லி, உடைந்த இயக்கத்தை இணைப்பதற்காக, இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்காக கையெழுத்திட்டு தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தார்.

ஏதோ, இவர்கள் குடும்பம் தான் மாமா, மச்சான் தான் இந்த சின்னத்தை பெற்று தந்ததாக எவ்வளவு பெரிய தவறான தகவலை சொல்கிறார்கள். அதற்கு திவாகரன் காரணம் சொல்கிறார்.

லட்சக்கணக்கான தொண்டர்கள் தங்களின் இன்னுயிரை நீத்து உழைத்த உழைப்பை, இவர்கள் பெற்ற தியாகத்தை, இந்த இருவர் (திவாகரன், நடராஜன்) பெற வேண்டும் என்று எவ்வளவு கயமைத்தனமாக கருத்தை திவாகரன் சொல்லி இருக்கிறார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

அமைச்சர் முனுசாமிக்கு கண்டனம்:

இந்நிலையில் அமைச்சர் முனுசாமியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், “அதிமுக தொடர்பாக கருத்து சொல்ல திவாகரனுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கேட்டிருக்கிறார்.

கட்சியில் எல்லா வித பொறுப்புகளும் வகித்த அவர், இதுபோல பேசுவது முரணானது. கண்டனத்துக்குரியது. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா தனித்துவிடப்பட்டபோது அவருக்கு பாதுகாப்பு அளிக்க குழு அமைத்து பக்கபலமாகவும், உயிர்க் கவசமாகவும் இருந்தவர் திவாகரன். அதை கே.பி.முனுசாமி மறந்திருக்க மாட்டார்.

அதிமுக அலுவலகத்தை கைப்பற்ற முயற்சி நடந்தபோது ஜெயலலிதா தாக்கப்பட்டார். அப்போது திவாகரன் தலைமை யிலான குழு அவரைக் காப் பாற்றியது. 1991-ல் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்கும் வரை அவரது அனைத்து நடவடிக் கைகளுக்கும் பக்கபலமாக திவாகரன் இருந்தார் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.

முரண்பட்ட கருத்து யாராவது தெரிவித்ததாக கே.பி.முனுசாமி கருதினால், அதுபற்றி தலைமைக் கழகத்திடம் பேச வேண்டும். அதைவிடுத்து எங்கேயோ இருந்துகொண்டு பேசக்கூடாது. அப்படிப் பேசியதால் அவர் யாரிடமோ விலை போய்விட்டார் என்று குற்றம்சாட்டுகிறேன். அவர் வேறு பாதை அமைத்துவிட்டார் என்று தெரிகிறது” என்று கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்