இளவரசன் நினைவு நாள்: தர்மபுரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

புதன், 1 ஜூலை 2015 (11:37 IST)
இளவரசனின்  2 ஆம் ஆண்டு நினைவு நாள் இம்மாதம் 4 ஆம் தேதி வரவுள்ள நிலையில், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க தர்மபுரி, பென்னாகரம், மற்றும் பாலக்கோடு ஆகிய  3 தாலுக்காவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 

 
தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனி பகுதியை சேர்ந்தவர் இளவரசன். தலித் இளைஞரான இவர் அருகே உள்ள செல்லான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் திவ்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இருவேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் இது சாதிமோதலாக மாறியது.
 
இதனால் அங்கு பெரிய கலவரம் ஏற்பட்டது. இதனால் தலித் மக்களின் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த காதல் விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து 2 பேரும் பிரிந்தனர்.
 
இந்நிலையில், இளவரசன் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
 
இளவரசன் சாவை கொலை வழக்கமாக மாற்றக்கோரி அவரது உறவினர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனால் தர்மபுரியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
 
இந்த நிலையில், அவருடைய 2 ஆம் ஆண்டு நினைவு நாள் வருகிற 4 ஆம் தேதி வருகிறது. எனவே ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு தர்மபுரி, பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய 3 தாலுகாக்களில் போடப்பட்டுள்ளது.
 
இந்த 144 தடை உத்தரவு ஒரு வார காலத்திற்கு தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு ஆகிய 3 தாலுகாக்களிலும் அமலில் இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்