வாரிசு சான்றுக்கு பொய்யான தகவல்..! குற்ற வழக்கு பாயும்.! உயர் நீதிமன்றம் அதிரடி..!!

Senthil Velan

செவ்வாய், 14 மே 2024 (16:58 IST)
வாரிசுரிமை சான்று கோரி பொய் தகவல்களுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு எதிராக குற்ற வழக்குப்பதிவு செய்ய அனைத்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும் 5 வாரங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாரண்ணன் என்பவர், தனது தந்தையின் மரணத்துக்குப் பின், வாரிசுரிமை சான்று வழங்கக் கோரி மேட்டுப்பாளையம் தாசில்தாரிடம் விண்ணப்பித்துள்ளார். இதுகுறித்த விசாரணையில், மாரண்ணனின் தந்தை மாரண்ண கவுடருக்கு இரு மகள்கள், இரு மகன்கள் உள்ள நிலையில், தான் மட்டுமே வாரிசு எனக்கூறி மாரண்ணன் விண்ணபித்துள்ளதாகக் கூறி, அவரது மனுவை தாசில்தாரர் நிராகரித்தார்.
 
இந்த உத்தரவை எதிர்த்து மாரண்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், பொய் தகவல்களைக் கூறி, உண்மையை மறைத்து, வாரிசுரிமை சான்று கோரி விண்ணப்பிப்பது இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம் என தெரிவிக்கப்பட்டது. 
 
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பொய் தகவல்களைக் கூறி வாரிசுரிமை சான்று பெற்று, சொத்துக்களை பெயர் மாற்றம் செய்வதால், மற்ற வாரிசுகளின் உரிமை பறிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். 

உண்மை தகவல்களை மறைத்து வாரிசுரிமை சான்று கோரி விண்ணப்பிக்கப்படுவது தொடர்பான வழக்குகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது என்றும் பொய் தகவல்களைக் கூறி வாரிசுரிமை சான்று கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு எதிராக குற்ற வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.

ALSO READ: ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி தோல்வியடையும்..! பிரஷாந்த் கிஷோர் கணிப்பு..!!
 
இது தொடர்பாக, அனைத்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும் 5 வாரங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என தமிழக வருவாய் நிர்வாகத் துறை ஆணையருக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்