மிரட்டும் தினகரன்: அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் எனக்கு உள்ளது!

செவ்வாய், 20 ஜூன் 2017 (17:26 IST)
அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் துணைப் பொதுச்செயலாளராக உள்ள தனக்கு உள்ளதாகவும், அமைச்சர்கள் இதனை புரிந்து நடக்க வேண்டும் என மிரட்டல் விடும் வகையில் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.


 
 
அதிமுக துணைப் பொதுச்செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனை ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்தனர். இதனையடுத்து பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து புகார் பட்டியல் வாசித்தார் தினகரன்.
 
இந்நிலையில் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனை நடத்திய தினகரன் தனது அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய தினகரன் அமைச்சர்களை மிரட்டும் விதத்தி பேசினார்.
 
கட்சியின் பொதுச்செயலாளரான சசிகலா செயல்பட முடியாத நிலையில் இருக்கிறார். அதனால் அவரால் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட எனக்கே அத்தனை அதிகாரமும் உள்ளது. என்னை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.
 
ஆனால் அமைச்சர்கள் என்னை நீக்கி வைப்பதாக கூறி வருவது அவர்களின் அறியாமையை காட்டுகிறது. அவர்களுக்கு என்னை நீக்கும் அதிகாரத்தை கொடுத்தது யார் என கேளுங்கள். என்னை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக கூறும் அமைச்சர்களை நீக்கும் அதிகாரமும் துணைப் பொதுச்செயலாளர் என்கிற முறையில் என்னிடமே இருக்கிறது. இதனை பயன்படுத்தி அமைச்சர்கள் உள்ளிட்ட யாரையும் என்னால் நீக்க முடியும். இதனை அமைச்சர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்