துரோகம் செய்த நடராஜன் முதல் வரிசையில் எப்படி இருந்தார்? - சசிகலா புஷ்பா காட்டம்

வெள்ளி, 16 டிசம்பர் 2016 (12:08 IST)
என் கணவர் எல்லாம் துரோகம் செய்தார் என்று சசிகலா கூறினாரே, தகனம் செய்யப்பட்ட இடத்தில் முதல் வரிசையில் எப்படி உட்கார்ந்திருக்கிறார் என்று சசிகலா புஷ்பா கேள்வி எழுப்பியுள்ளார்.


 

இது குறித்து சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா செய்தியாளர்களிடத்தில் கூறுகையில், ”ஜெயலலிதாலவின் இறப்பு இன்னும் சரியாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஜெயலலிதா என்றைக்கு பொதுமக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ, அன்று முதல் அவர் மக்கள் சொத்து.

அப்படிப்பட்ட மக்கள் சொத்தாகிய பெண் முதல் அமைச்சருக்கு என்ன நேர்ந்தது என்பதையே இன்னும் மக்களிடத்தில் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை. எதற்காக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். என்ன நேர்ந்தது அவருக்கு வீட்டில். எதனால் ஆளுநர், அமைச்சர்கள் யாரும் ஜெயலலிதாவை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவருக்கு 75 நாட்கள் என்ன சிகிச்சை கொடுக்கப்பட்டது. அவருக்கு என்ன மாதிரியான உணவுகள் வழங்கப்பட்டது. இவற்றையெல்லாம் பற்றி ஒரு நீதி விசாரணை வேண்டும்.

அதற்குள் அடுத்ததாக இவர் வரப்போகிறார். அவர் வரப்போகிறார் என்று செய்திகள் வேடிக்கையாக உள்ளது. ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவை வழிநடத்தப்போவது யார்? அடுத்த பொதுச்செயலாளர் யார்? என்ற கேள்வி கட்சியினரிடையேயும், பொதுமக்களிடையேயும் பேசப்பட்டு வருகிறது. ஜெயலலிதா எந்த இடத்திலேயும் சசிகலா நடராஜன் தலைமை ஏற்க வேண்டும் என்று விரும்பவில்லை. வெளிப்படுத்தவும் இல்லை. அரசியலில் சசிகலா வருவதை விரும்பியதே கிடையாது.

1995இல் சசிகலா நடராஜன் மகனாக கருதப்பட்ட சுதாகரனின் திருமணம் தடாபுடலாக நடத்தப்பட்டபோதுதான், ஜெயலலிதாவுக்கு கெட்டப்பெயர் ஏற்பட்டதாக உணர்கிறேன். ஜெயலலிதாவை பொறுத்தவரை மக்களிடம் பெரிய இமேஜ் இருந்தது. சுதாகரனின் திருமணம் பெரிய கெட்டப் பெயர் ஏற்படுத்தி தந்தது. இதனால் ஆட்சியை இழந்தார். அப்போது சசிகலா மீது கோபப்பட்டார்.

2011இல் சசிகலாவையும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 16 பேரையும் சதி செய்தார்கள், துரோகம் செய்தார்கள், என்னை கொல்லப்பார்த்தார்கள், என்னுடைய ஆட்சியை துரோகம் செய்து கவிழ்க்க பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டி ஜெயலலிதாவே அவர்களை வெளியே அனுப்பினார்கள். அதற்கு பழிவாங்கப்பட்டார்களா ஜெயலலிதா என்று மக்களிடையே கேள்வி எழுந்து கொண்டிருக்கிறது.

என் குடும்பம் துரோகம் செய்தது என்று சசிகலா நடராஜன் கூறினார்களே. அம்மாவின் சடலத்தை சுற்றி யார் நின்றார்கள்? கட்சிக்காரர்களே காணவில்லை. முதலமைச்சர் முதற்கொண்டு எல்லாரும் அடிமை மாதிரி கீழே உட்கார்ந்திருக்கிறார்கள். என் கணவர் எல்லாம் துரோகம் செய்தார் என்று கூறினாரே, தகனம் செய்யப்பட்ட இடத்தில் முதல் வரிசையில் உட்கார்ந்திருக்கிறார். அம்மா உயிரோடு இருந்திருந்தால் இவர்களை எல்லாம் சேர்த்திருப்பீர்களா?

ஒரு பெண் முதல் அமைச்சர். எந்த நாட்டுக்கும் கிடைக்காத ஒரு பெருமை. இந்தக் கட்சிக்காக இவ்வளவு நாள் போராடி வந்தவர் ஜெயலலிதா. அவர்களுடைய சாவு மக்களால் நல்லதாக பேசப்பட்டிருக்க வேண்டும். அவர்களுடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும்.

ஜெயலலிதா முதலமைச்சராக வரவேண்டுமென ஓட்டுபோட்டார்களே தவிர, நடுவில் சசிகலா கட்சியை தூக்க வேண்டும், முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஓட்டுப்போடவில்லை. அம்மாவின் முகத்திற்கு கிடைத்த ஓட்டு. வேற யாரையாவது நிறுத்தியிருந்தால் இவ்வளவு ஓட்டு விழுந்திருக்காது” என்று கூறியுள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்