பேச மறுக்கும் சசிகலா எப்படி அதிமுக பொதுச்செயலாளர் ஆவார்?: தீபா அதிரடி!

செவ்வாய், 20 டிசம்பர் 2016 (09:07 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவர் மரணமடைந்த பின்னரும் அவரது அண்ணன் மகள் தீபா பல்வேறு குற்றச்சாட்டுகளை ஜெயலலிதாவின் தோழி சசிகலா மீது வைத்து வருகிறார்.


 
 
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தீபாவுக்கு அவரை பார்க்கவோ அப்பல்லோ மருத்துவமனையிலேயோ அனுமதி கிடைக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட தீபா சசிகலா தன்னை தடுப்பதாகவும், அவர் யார் என்னை தடுக்க என பல குற்றச்சாட்டுகள் வைத்தார்.
 
தற்போது ஜெயலலிதா இறந்து விட்டதால் அவரது பெயரையும் புகழையும் காப்பாற்ற மக்கள் விரும்பினால் அரசியலில் ஈடுபட தயார் என தீபா தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் பிரபல தமிழ் தொலைக்காட்சி சேனல் ஒன்று தீபாவை பேட்டி எடுத்தது. பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் அந்த பேட்டி ஒளிபரப்பானது.
 
அதில் பேசிய தீபா, அத்தை ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை. ஆனால் அவர் மருத்துவமனையில் சேர்ந்தது முதல் கடைசி நாள் வரை நடந்த விசயங்கள், அளிக்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி அவருடன் இருந்தவர் விளக்க வேண்டும் என்றார்.
 
மருத்துவர்கள் அதைப்பற்றி கூறினாலும், அவருடைய உதவியாளர் என கூறிக்கொண்டு உடன் இருந்தவர்கள் கூற வேண்டியது அவசியம். அதிமுக பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்று நினைக்கும் சசிகலா, இதைக் கூட சொல்லக்கூடாதா? இந்த விசயத்திற்கே பேச மறுப்பவர்கள், நாளை பொதுச்செயலாளர் ஆகி கட்சியை எப்படி வழி நடத்துவார்கள் என்று கூறியுள்ளார் தீபா.
 

வெப்துனியாவைப் படிக்கவும்