கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல் புளியங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்ற மாணவர், பேருந்து நிறுத்தத்தில் வைத்து, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் 'முதலமைச்சரின் கவனம் சட்டம் ஒழுங்கை நோக்கித் திரும்ப, இன்னும் எத்தனை உயிர்ப்பலிகள் வேண்டும்?' என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல் புளியங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்ற 17 வயது மாணவர், பேருந்து நிறுத்தத்தில் வைத்து, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கொலையாளிகளும், குற்றவாளிகளும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். கொலை என்பது தினசரி வாடிக்கையாகிவிட்டது.
சட்டம் ஒழுங்கு எனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றார் முதலமைச்சர் ஸ்டாலின். சட்டம் ஒழுங்கு செல்லும் பாதை மிகுந்த கவலைக்குரியதாக இருக்கிறது. ஆனால், சமூக வலைத்தளங்களில் எதிர்க்கருத்து வைப்பவர்களைக் கைது செய்ய முனைப்பு காட்டும் முதலமைச்சர், கொலை போன்ற கடும் குற்றச் சம்பவங்களைக் கண்டும் காணாமல் இருந்து வருகிறார்.