இந்தியாவின் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் சில மலை சிகரங்களைக் கைப்பற்றுவது தான் கார்கில் போரின் முதலாவது திட்டமாக இருந்தது என்று நசீம் ஜாஹ்ரா கூறினார். மலைகளின் உச்சியில் கைப்பற்றப்படும் இடங்களில் இருந்து திடீர் தாக்குதல்கள் நடத்தி ஸ்ரீநகர் - லே நெடுஞ்சாலையை முடக்குவதும் அந்தத் திட்டத்தில் அடங்கும் என்றார்.
அந்தச் சாலை மிகவும் முக்கியமானது. காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்தினருக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு செல்வதற்கான ஒரே வழித்தடம் அது மட்டும் தான். இவ்வாறு செய்வதால் நிலைமை மோசமாகும் என்றும், காஷ்மீர் பிரச்சனை பற்றி பேச்சு நடத்தும் கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்படும் என்றும் கார்கில் போருக்கு திட்டமிட்டவர்கள் நம்பினர் என்று நசீம் கூறினார். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் போரிட்ட விதம் - அவர்களுடைய தைரியம் - உலகின் எட்டாவது அதிசயம் போல அமைந்துவிட்டது.
``கார்கில் முயற்சி பற்றி பாகிஸ்தானியர்கள் பெருமை கொள்ளும் அதே நேரத்தில் வருத்தமும் கொள்ள வேண்டும் என்பது தான் குறிப்பிடத்தக்க விஷயம். இளம் வீரர்கள் 17 - 18,000 அடி உயரத்தில் உள்ள சிகரத்துக்கு, பாறைகள் மீது ஏறி, குளிர் பருவத்தில், மோசமான சூழ்நிலைகளைத் தாண்டி சென்றார்கள் என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம். ஆனால் அவர்கள் எதற்காக அங்கு அனுப்பப் பட்டார்கள் என்ற கேள்வியும் எழுகிறது'' என்று அவர் கூறியுள்ளார்.
``ஆரம்பத்தில் இந்திய ராணுவத்தினருக்குப் பெரிய பாதிப்புகளை பாகிஸ்தானிய வீரர்கள் ஏற்படுத்தினர். என்ன நடந்தது என்று இந்திய ராணுவத்துக்கே தெரியவில்லை.பாகிஸ்தானிய வீரர்களை அவர்களுடைய இடத்தில் இருந்து சில மணி நேரங்கள் அல்லது சில நாட்களில் தூக்கி எறிந்துவிடுவோம் என்று இந்திய ராணுவ ஜெனரல்கள் கூறினர்'' என்றும் நசீம் ஜாஹ்ரா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானிய வீரர்கள் மலையின் உச்சியில் இருந்ததால், உயரமான இடத்தில் இருந்து இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவது அவர்களுக்கு எளிதாக இருந்தது. ஆனால் அதன் பிறகு நிலைமை மாறிவிட்டது என்று ஜாஹ்ரா குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ள விஷயங்கள் பற்றி கருத்து பெறுவதற்கு பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
``பெரியமுட்டாள்தனம்''
என்ன நடந்திருக்கிறது என்பதை உணர்ந்த பிறகு, இதுபோன்ற நடவடிக்கைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படாத போபர்ஸ் பீரங்கிகளை இந்திய ராணுவம் கொண்டு வந்தது.
``கார்கில் போரில் நிலைமையை மாற்றியது எது என்று நீங்கள் சொல்ல வேண்டுமானால், அது போபர்ஸ் பீரங்கிகள் தான். பாகிஸ்தானியர்கள் முடக்க விரும்பிய ஸ்ரீநகர் - லே நெடுஞ்சாலையில் இந்திய ராணுவத்தினர் போபர்ஸ் பீரங்கிகளை நிலைநிறுத்தினர். மலைச் சிகரங்களை போபர்ஸ் பீரங்கிகள் சுக்குநூறாக உடைத்துவிட்டன என்பதை இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பினர் உறுதி செய்கின்றனர். மேலே இருந்து இந்திய விமானப் படை தொடர்ந்து குண்டுகள் வீசியது.'' கார்கில் மலைகளில் இருந்து இறங்கி வரும் போதுகூட பாகிஸ்தான் ராணுவத்துக்கு பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டது என்று நசீம் ஜாஹ்ரா தெரிவித்துள்ளார்.
``அவர்கள் திரும்பி வருவதற்கு சாலையோ அல்லது வாகனங்கள் செல்லும் பாதையோ கிடையாது. நட்புறவான சூழலிலும் அவர்கள் இறங்கி வரவில்லை. 16-18 ஆயிரம் அடி உயரமான மலைகளில் இருந்து இறங்கி வருவது, சரிவுகள் நிறைந்த பகுதிகளைக் கடந்து வருவது, குளிரில் தாண்டி வருவது சிரமமானது. தங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததும், இந்திய வீரர்கள் சரியான தாக்குதல் நடத்தினர். அது சிறிய போர், ஆனால் உக்கிரமாக நடந்த போர்.'' கார்கிலில் இந்தியா தனது விமானப் படையை நன்றாகப் பயன்படுத்தியது என்று நசீம் ஜாஹிர் கூறியுள்ளார். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டிச் சென்ற பிறகுதான் கார்கில் போர் பற்றியே பாகிஸ்தான் விமானப் படைக்குத் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கார்கில் போரில் பாகிஸ்தானியர்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற இறுதி தகவல் எதுவும் இல்லை என்கிறார் அவர்.
``300 பேர் இறந்ததாக சிலர் கூறுகின்றனர். இல்லை, சுமார் 2000 பேர் இறந்தனர் என சிலர் கூறுகின்றனர். ஆனால் அநேகமாக அங்கே 2000 பேர் செல்லவில்லை. ராணுவத்தினரிடம் நான் பேசிய வரையில், 1965 அல்லது கிழக்கு பாகிஸ்தான் சம்பவங்களின் போது கூட இப்போது (கார்கிலில்) ஏற்பட்ட அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும், அது மிகப் பெரிய முட்டாள்தனம் என்றும் அவர்கள் கூறினர்'' என்று நசீம் ஜாஹ்ரா குறிப்பிட்டுள்ளார்.
`காஷ்மீர், சியாச்சின், கார்கில்'
கார்கில் திட்டம் பல ஆண்டுகளாகவே பரிசீலனையில் இருந்து வந்திருக்கிறது என்றும், ஆனால் 1999ல் அமல்படுத்தப்பட்டது என்றும் நசீம் ஜாஹ்ரா கூறியுள்ளார்.
``பெனாசிர் புட்டோவிடம், ஜெனரல் பர்வேஸ் முஷாரப் இந்தத் திட்டத்தை அளித்தார். அநேகமாக ராணுவ நடவடிக்கைகள் பிரிவின் டைரக்டர் ஜெனரலாக இருந்தபோது இதை அளித்திருக்கிறார். அதை பெனாசிர் நிராகரித்துவிட்டார். முன்னதாக ஜெனரல் ஜியா-உல்-ஹக் ஆட்சியின் போதும் இதுபற்றி பேசப் பட்டிருக்கிறது'' என்று நசீம் ஜாஹ்ரா குறிப்பிட்டுள்ளார்.
கார்கில் நடவடிக்கைக்கு முக்கிய காரணமே காஷ்மீர் பிரச்சினை தான் என்று நசீம் கூறியுள்ளார். ``இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான சர்ச்சை உயிர்ப்புடனேயே உள்ளது, சில நேரம் மவுன யுத்தமாக இருக்கும், சில நேரம் மோதல்களாக இருக்கும். இந்தச் சண்டையில் காஷ்மீரிகளும் பாதிக்கப் படுவர். காஷ்மீர் தான் முக்கிய பிரச்சினை என்பதை புல்வாமா, பாலகோட் சம்பவங்கள் வெளிப்படுத்தின; மற்ற விஷயங்கள் இந்தப் பிரச்சினையின் தொடர்ச்சியாகத் தான் நடைபெறுகின்றன என்பது தெரிந்தது'' என்றும் நசீமா தெரிவித்துள்ளார்.
கார்கில் ஆக்கிரமிப்பை பாகிஸ்தான் ராணுவம் செய்ததற்கு, வேறொரு விஷயமும் உத்வேகமாக அமைந்திருந்தது என்றும் அவர் விவரித்துள்ளார்.
``இந்தியா 1984ல் கைப்பற்றிய சியாச்சின் பிரச்சனையை இரு நாடுகளும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பது மற்றொரு பிரச்சனை'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான்குஜெனரல்கள்குழு'
நான்கு ஜெனரல்களைக் கொண்ட குழு தான் கார்கில் திட்டத்தை அமல்படுத்தியது என்று நசீம் ஜாஹ்ரா கூறியுள்ளார். அப்போதைய ராணுவ தலைமைத் தளபதி பர்வேஸ் முஷரப், வடக்குப் பகுதிகளின் படை கமாண்டர் மேஜர் ஜெனரல் ஜாவித் ஹசன், ஜெனரல் ஸ்டாஃப் பிரிவு தலைவர் லெப் ஜெனரல் அஜீஸ் கான், 10வது படைப் பிரிவு கமாண்டர் லெப் ஜெனரல் மெஹமூத் அஹமது ஆகியோர் தான் இதைச் செய்தார்கள். ராணுவத்தின் மற்ற பிரிவுகளின் தலைவர்களுக்கு இந்த நடவடிக்கை பற்றி தெரியாது.
``எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நான்கு ஜெனரல்கள் பணியில் இருந்தனர். காஷ்மீர் பிரச்சினையில் அவர்கள் ஆர்வமாக இருந்தனர். பாகிஸ்தானில் மக்கள் அரசுக்கும் ராணுவத்திற்கும் இடையிலான உறவுகள், ராணுவத்தினரின் நிலைப்பாட்டை சார்ந்ததாகவே இருந்தது. பிரச்சனைகள் வந்தால் அதை சமாளித்துவிட முடியும் என்று ஜெனரல்கள் அறிந்திருந்தனர். முன்பும் அப்படி நடந்திருக்கிறது.''
ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின், முறைப்படியான ஒப்புதல் இல்லாமல் கார்கில் நடவடிக்கையில் ஈடுபட்டதன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கான அதிகாரம் குறித்த கொள்கையை நான்கு ஜெனரல்களும் மீறிவிட்டனர் என்று நசீம் ஜாஹ்ரா நம்புகிறார். 1999 பிப்ரவரியில் நவாஸ் ஷெரீப் மற்றும் வாஜ்பாயி இடையே லாகூரில் கையெழுத்தான அறிவிக்கையை நசீம் ஜாஹ்ரா நினைவுகூர்ந்துள்ளார். பேச்சுவார்த்தை என்ற கொள்கையின் அடிப்படையில் இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கு இரு நாடுகளும் அதில் ஒப்புக் கொண்டிருந்தன.
`ஜெனரல்களின்ஆட்சேபங்கள்'
ஜெனரல் பர்வேஸ் முஷாரப் 1999 மே 16 ஆம் தேதி கார்கில் பற்றி படைப் பிரிவுகளின் தலைவர்களுக்குத் தகவல்களைத் தெரிவித்தார் என்று நசீம் ஜாஹ்ரா தெரிவித்துள்ளார்.
``அப்போது பல ஜெனரல்களும், கார்கிலில் பாகிஸ்தான் ராணுவம் என்ன செய்து கொண்டிருந்தது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். ஆனால் அப்போதைய சூழ்நிலை மாறுபட்டிருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கார்கில் நடவடிக்கையைத் தொடங்கியவர்கள், தாங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், சாதகமான நிலையில் இருப்பதாகவும், நம்மை யாராலும் அசைக்க முடியாது என்றும் மற்றவர்களிடம் கூறி வந்தனர். நிறைய பகைமை இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் அப்போதும் கூட சில ஜெனரல்கள் தெளிவாக, கார்கில் நடவடிக்கைகள் பற்றி கேள்விகள் எழுப்பியுள்ளனர்.''
`கார்கிலின்வெற்றியாளர்'
பிரதமர் நவாஸ் ஷெரிபுக்கு 1999 மே 17ல் அளித்த தகவலின் போது தான் கார்கில் நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்கப்பட்டது என்று நசீம் ஜாஹ்ரா கூறியுள்ளார். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ராணுவத்தினர் தாண்டி சில வாரங்கள் கழித்து தான் பிரதமருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறார் நசீம் ஜாஹ்ரா.
``நமது ராணுவத்தினர் சிலர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்துவிட்டதாக, நிலைமையைப் புரிந்து கொண்ட அப்போதைய வெளியுறவு அமைச்சர் சர்ட்டஜ் அஜீஸ், பிரதமரை தொடர்பு கொண்டு, இதுகுறித்து இந்தியாவுடன் பேசி வருவதாகத் தெரிவித்தார்.''
``லாகூர் உச்சி மாநாட்டுக்குப் பிறகு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன'' என்றும் நசீம் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தொடக்கத்தில் தனது நடவடிக்கை மூலம் காஷ்மீர் பிரச்சினையை ராணுவத்தால் தீர்க்க முடியும் என்று நவாஸ் தெரீப் உண்மையில் திருப்தி கொண்டிருந்தார் என்று நசீம் ஜாஹ்ரா கூறியுள்ளார்.
``சர்வதேசப் படைகள், குறிப்பாக அமெரிக்கா இதை ஏற்றுக் கொள்ளாது என்று சர்ட்டஜ் அஜீஸ் விளக்கியுள்ளார். அமெரிக்கா எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். இல்லை சர்ட்டஜ் சாஹிப், பேச்சுவார்த்தை சந்திப்புகள் மற்றும் கோப்புகளை பரிமாறிக் கொள்வதன் மூலமாக காஷ்மீர் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது என்று நவாஸ் ஷெரீப் அப்போது கூறியுள்ளார்'' என்றும் நசீம் தெரிவித்துள்ளார்.
கார்கில் நடவடிக்கையில் அங்கமாக இருந்த ஜெனரல் அஜீஸ் கான், நவாஸ் ஷெரீபை தொடர்பு கொண்டு, காயிதே அஜாம் முகமது அலி ஜின்னா பாகிஸ்தானை உருவாக்கினார், இப்போது காஷ்மீரை வெற்றி கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
``காஷ்மீர்விவரிப்புதிரிக்கப்பட்டது''
ஜெனரல் முஷரப் கார்கில் நடவடிக்கையை எடுத்தபோது பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உறவுகள் மேம்பட்டுக் கொண்டிருந்தன.
வெற்றியை கொண்டாடும் இந்திய சிப்பாய்கள்
``வாஜ்பாயி பாகிஸ்தானுக்கு வந்தார். இந்தியப் பிரதமருக்கு பாகிஸ்தான் உற்சாக வரவேற்பு அளித்தது. அவர் பேச்சு நடத்துவதற்காக வந்திருந்தார். பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன. பேச்சுவார்த்தைக்கு வருமாறு பின்னர் ஜெனரல் முஷரப் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார். பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வருவதற்கு சம்மதிக்க வைப்பதற்காக அவர் கையேந்தி இந்தியாவுக்குச் செல்ல வேண்டியிருந்தது.''
காஷ்மீர் நிகழ்வுகளை பாகிஸ்தான் தரப்பு விவரித்ததைக் கொண்டு அது பாகிஸ்தானுக்கு பயன் தந்தது என்று கூறினால், அது தவறானது என்கிறார் நசீம்.
``உண்மைகள் இதற்கு ஆதரவாக இல்லை. பேச்சுவார்த்தை நடைமுறைகளை மீண்டும் தொடங்குவதற்கு பாகிஸ்தான் பல ஆண்டுகள் முயற்சி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் வகையில் அது தவறான நடவடிக்கையாக அமைந்துவிட்டது. 1971 மற்றும் சியாச்சினில் இந்தியா ஏற்கெனவே அடி கொடுத்துள்ள போதிலும், கார்கில் நடவடிக்கையில் ஈடுபட்டது மிகவும் பொறுப்பற்றத்தனம். பாகிஸ்தான் நற்பெயருக்கு அது பாதிப்பு ஏற்படுத்திவிட்டது.''
இருந்தபோதிலும், எந்த லாபமும் நட்டமும் நிரந்தரமானது அல்ல என்று நசீம் நம்புகிறார். தங்கள் கொள்கைகளை மறு ஆய்வு செய்வதற்கான வாய்ப்பு நாடுகளுக்கு கிடைக்கின்றன என்கிறார் அவர்.