டைட்டன் நிறுவனம் தமிழக அரசு தொடங்கியதா? இந்த தகவல் தெரியுமா?

புதன், 21 டிசம்பர் 2022 (10:47 IST)
இன்று உலகம் முழுவதும் பல நிறுவனங்களின் கைக்கடிகாரங்கள் பிரபலமாக உள்ளன. அவற்றில் முக்கியமான கைக்கடிகார நிறுவனங்களில் ஒன்று டைட்டன். டாடா நிறுவனத்தின் தயாரிப்பான டைட்டன் கைக்கடிகாரங்கள் உருவாவதற்கு தமிழ்நாடு அரசுதான் காரணம் என்பது தெரியுமா?

சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில் கைக்கடிகாரங்கள் மக்களிடையே பெரிதும் வரவேற்பு பெற்றிருந்த நிலையில் ஒரு சில கைக்கடிகார நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் கைக்கடிகாரங்கள் தயாரித்து வந்தன. பல நிறுவனங்கள் கைக்கடிகார தயாரிப்புக்கு அரசிடம் அனுமதி கேட்டாலும் கிடைப்பதில் சிரமம் இருந்தது.

அந்த சமயத்தில் டாடா நிறுவனம் கைக்கடிகார தயாரிப்பில் ஈடுபட விரும்பியது. அதற்கான முயற்சியில் ஜெர்ஜெஸ் தேசாய் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். கைக்கடிகார தொழில்நுட்பத்தை வைத்திருந்த பெரிய உலக நிறுவனங்களிடம் அவர் இந்தியாவில் புதிய கைக்கடிகார நிறுவனம் தொடங்க பேசி வந்தார். ஆனால் எதுவும் சாத்தியமாகவில்லை.

அப்போது தமிழ்நாடு அரசின் தொழில்வளர்ச்சி கழகம் கைக்கடிகார தயாரிப்பிற்காக பிரான்ஸை சேர்ந்த கடிகார நிறுவனத்திடம் பேசியிருந்தது. தமிழ்நாட்டில் கைக்கடிகார தயாரிப்பை மேற்கொள்ள கூட்டாளி நிறுவனம் ஒன்று தேவைப்பட்ட நிலையில் டாடா நிறுவனம் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டது.

தமிழ்நாடு தொழில்வளர்ச்சி கழகமான டிட்கோவும், டாடா வும் இணைந்து டைட்டன் என்ற புதிய பெயரில் கைக்கடிகார தயாரிப்புக்கு விண்ணப்பித்து அனுமதியும் பெற்றனர். ஓசூரில் 1986ல் அமைக்கப்பட்ட தொழிற்சாலை மூலமாக சில மாதங்களில் லட்சக்கணக்கான கைக்கடிகாரங்களை விற்று டைட்டன் சாதனை படைத்தது. பின்னர் 1989ல் உத்தரகாண்டின் டெராடூனில் புதிய தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் இருந்து ஆண்டுக்கு 5 லட்சம் கைக்கடிகார கேஸ் தயாரிக்கப்படுகிறது.

தற்போது டைட்டன் நிறுவனம் கைக்கடிகாரங்கள் மட்டுமல்லாமல் வேறு பல பொருட்களையும் தயாரித்து மிகப்பெரும் நிறுவனமாக உள்ளது. அதன் பிரதான பங்குதாரர்களின் ஒருவராக இன்றும் டிட்கோ உள்ளது.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்