உயர் அழுத்த மின் பாதை திட்டம்: தமிழக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

செவ்வாய், 2 ஜூன் 2015 (09:55 IST)
உயர் அழுத்த மின் பாதைகள் அமைக்க  விவசாயிகளின் விளைநிலங்களைத்  பறிக்க வேண்டாம் என்றும், அதையும் மீறி, தமிழக அரசு செயல்பட்டால், மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: -
 
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள், சிறுசேரியில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட 78 நிறுவனங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லப்பட உள்ளது.
 
இதற்காக, காஞ்சிபுரம் மாவட்டம் கலிவந்தப்பட்டு சிற்றூர் முதல் சோழிங்கநல்லூர் ஒட்டியம்பாக்கம் வரை 24 கி.மீ. தொலைவுக்கு 440 கிலோ வோல்ட் அழுத்தம் கொண்ட மின்பாதையை தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் அமைத்து வருகிறது. இதற்காக காயார், வெம்பேடு ஆகிய பகுதிகளில் 21 உயரழுத்த மின் கோபுரங்களை அமைக்க 150 ஏக்கர் நிலத்தை மின்தொடரமைப்புக் கழகம் தேர்வு செய்துள்ளது.
 
மொத்தம் 834 குடும்பங்களுக்கு சொந்தமான இந்த நிலங்களில், மின் கோபுரங்களை அமைக்கும் போது, அவர்களுக்கு எவ்வித இழப்பீடும் வழங்கப்படமாட்டாது என்று மின்தொடரமைப்புக் கழகம் அறிவித்துள்ளது.
 
மின்கோபுரங்கள் அமைத்தால், மின்பாதைக்கு இருபுறமும் தலா 33.5 மீட்டர் வீதம் மொத்தம் 67 மீட்டர் அகலத்துக்கு விவசாயம் செய்ய முடியாது என்பதால் 150 ஏக்கர் நிலத்தில் எந்த விவசாயியும் விவசாயம் செய்ய முடியாது. இதனால், அந்த நிலங்களை நம்பியுள்ள 834 குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாட நேரிடும்.
 
எனவே, உழவர்களுக்கு எதிரான இந்த திட்டத்தை கைவிட்டு, அண்ணா பல்கலைக்கழகம் வகுத்துத் தந்த வழித்தடத்தில் மின்பாதையை அமைக்க ஆணையிட வேண்டும். இல்லை எனில் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாமக நடத்தும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்