ராம்குமார் பிரேத பரிசோதனை வழக்கு : உச்ச நீதிமன்றத்தை நாட நீதிபதி வலியுறுத்தல்

வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (16:02 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் மரணம் அடைந்த ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை தொடர்பான வழக்கில், ராம்குமாரின் தந்தை உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் மரணம் அடைந்த ராம்குமாரின் உடல் தற்போது சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  
 
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால், பிரேத பரிசோதனை செய்யப்படும் போது, அரசு மருத்துவர்களோடு,  தங்கள் சார்பில் ஒரு தனியார்  மருத்துவர் மற்றும் ஒரு வழக்கறிஞரை அனுமதிக்க வேண்டும்  என்று ராம்குமாரின் தந்தை சார்பில் 2 நாட்களுக்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
 
அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தனியார் மருத்துவரை அனுமதிப்பது குறித்து இரு நீதிபதிகளிடையே கருத்து வேறுபாடு எழுந்ததால், இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிப்பார் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. 
 
அதன்படி, அந்த வழக்கு விசாரணை நேற்று காலை நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்புவிற்கும், அரசு தரப்பு வழக்கறிஞருக்கும் இடையே அனல் பறக்கும் விவாதங்கள் எழுந்ததாக தெரிகிறது. 
 
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருபாகரன், தீர்ப்பை இன்று மாலை 5 மணிக்கு ஒத்தி வைத்துள்ளார்.  ஆனால், சுமார் 7 மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
 
தீர்ப்பளித்த நீதிபதி, ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்யும் குழுவில், தனியார் மருத்துவர் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார். அதற்கு பதிலாக, எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் ஒருவரை சேர்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார். செப்டம்பர் 27ம் தேதிக்குள் மருத்துவரை முடிவு செய்து, பிரேத பரிசோதனையை முடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
 
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராம்குமாரின் தந்தை பரமசிவம், இன்று காலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுலிடம் மேல்முறையீடு செய்தார். ஆனால் ஏற்கனவே 3 நீதிபதிகளுக்குள் முரண்பட்ட கருத்து எழுந்ததால், 5வது நீதிபதிகள் அமர்வு விசாரிப்பது முறையாக இருக்காது. எனவே ராம்குமார் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என தலைமை நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்