ஜெ. உடல் நிலை; டிராஃபிக் ராமசாமி மனு தள்ளுபடி: சுய விளம்பரம் என எச்சரித்த நீதிமன்றம்!

வியாழன், 6 அக்டோபர் 2016 (11:44 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த அறிக்கை மற்றும் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.


 
 
கடந்த மாதம் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருவதால் அப்பப்போது பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி முதல்வரின் உடல்நிலை குறித்து அறிய உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
அந்த மனுவில் தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்த உண்மையான அறிக்கையை அவரது புகைப்படத்துடன் வெளியிடவேண்டும். முதல்வரின் உடல்நிலை சரியாகும் வரை தற்காலிக முதல்வரை தமிழக ஆளுநர் நியமனம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
 
இன்று விசாரணைக்கு வந்த இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு இது பொதுநல வழக்கு அல்ல என்றும் சுய விளம்பரத்துக்கான வழக்கு எனவும் கருத்து கூறியது. மேலும் சுய விளம்பரத்துக்காக நீதிமன்றத்தை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்