சென்னையில் தரமான ஹெல்மெட் விலை ரூ.499க்கு சரிந்தது

வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (01:12 IST)
சென்னையில் தரமான ஹெல்மெட் விலை ரூ.499க்கு சரிந்ததால், இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

 
சென்னை உயர்  நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் ஜூலை 1 ஆம் தேதி மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும் என்று கடந்த ஜூன் 15 ஆம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து ஹெல்மெட் விற்பனை அதிகரித்தது.

தரம் குறைந்த ஹெல்மெட் அதிக விலை கொடுத்து மக்கள் வாங்கும் அழல நிலை ஏற்பட்டது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
 
ஆனால், ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை தீவிரமாக அமல்படுத்துவதில் எந்த சமரசமும் செய்ய முடியாது. யானை வாங்குபவர்கள் அங்குசத்தையும் சேர்த்துதான் வாங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உறுதியாக சொல்லிவிட்டது.
 
இதனையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு, கூடுதல் விலைக்கு ஹெல்மெட்டை கடை உரிமையாளர்கள் விற்பனை செய்தனர். சென்னையைப் பொறுத்தவரை சுமார் ரூ.1200 முதல் ரூ.2000 வரை விற்பனை செய்தனர்.
 
இதனால், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கடைகளை கண்காணிக்கும் பணியில் தமிழகம் முழுவதும் தொழிலாளர் நல அதிகாரிகள் ஈடுபட்டனர். சென்னையில் 3 பிரிவுகளாக தொழிலாளர் நல அதிகாரிகள் ‘ஹெல்மெட்’ கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
 
பிராட்வேயில் 13 கடைகளிலும், அண்ணாநகர், அமைந்தகரை ஆகிய இடங்களில் உள்ள கடைகளிலும், அமைந்தகரை, அண்ணாநகர், வில்லிவாக்கம், ஐ.சி.எப். பகுதியில் 15 கடைகளிலும் உள்ள ஹெல்மெட் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
 
நடைபெற்ற சோதனையில், கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஹெல்மெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இருப்பினும் கூடுதல் விலைக்கு ஹெல்மெட் விற்பனையை அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை
இந்த நிலையில், கரூர், சேலம், கோவை, திருப்பூர், திருச்சி போன்ற ஊர்களில் இருந்து ஹெல்மெட்டை மிக குறைந்த விலைக்கு உறவினர்கள் மூலம் சென்னை வாசிகள் வாங்கினர்.
 
இந்த நிலையில், கடந்த சில தினங்களாக, ஹெல்மெட் விலை ரூ 499க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில், அண்ணா சாலை, தி நகர், அண்ணா நகர், பிராட்வே, பெசன்ட நகர் என பல பகுதிகளிலும் விலை அதிரடியாக குறைந்தது. இதனால், தற்போது நல்ல தரமான ஹெல்மெட்டை மிக குறைந்த விலைக்கு சென்னையில் பொதுமக்கள் வாங்கி வருகின்றனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்