விடிய விடிய கொட்டித் தீர்த்தது: சென்னையில் 8ம் தேதி வரை மழை

செவ்வாய், 1 டிசம்பர் 2015 (09:36 IST)
சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.


 

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் அடுத்தடுத்து உருவாகியதால் தமிழகமெங்கும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை நகரில் நேற்று பிற்பகலில் தொடங்கிய கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

கடந்த சில தினங்களாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய சென்னைவாசிகள் மீண்டும் பெய்யும் கனழையை அடுத்து கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சாலைகளில் வெள்ளம் காரணமாக பல இடங்களில் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது.  

இந்தநிலையில் வங்கக்கடலில் உள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

வங்க கடலில் அந்தமான் அருகே தென் கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து தென் மேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ளது. இது மெதுவாகத்தான் நகரும்.

இதனால் தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்.கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யும். சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். சில நேரங்களில் கனமழை பெய்யும்.

மொத்தத்தில் தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தையும் சேர்த்தால் 5 நாட்களுக்கு மழை உண்டு. சென்னையில் 8ம் தேதி வரை மழை உள்ளது என்று கூறினார்.

வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் 31 வரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்