கொட்டித் தீர்கிறது மழை - வெள்ளத்தில் சென்னை

சனி, 18 அக்டோபர் 2014 (14:16 IST)
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் பெரும்பகுதி வெள்ளக்காடாகக் காணப்படுகிறது.
 
தமிழக உள்மாவட்டங்களில் வளி மண்டல மேல்அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. மேலும், தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தமிழகத்தின் உள் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னையின் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் சாலைகளில் மட்டுமல்லாமல் வீடுகளிலும் தண்ணீர் வெள்ளம் போல் பெருகிக் கிடக்கிறது. தண்ணீர் வெளியேற்றப் படாததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையொட்டி நடைபெறும் வியாபரங்கள் மந்த நிலையிலேயே நடைபெறுகிறது. குறிப்பாக, துணிக்கடை, பட்டாசுக் கடை வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இது குறித்து தி.நகரில் உள்ள துணிக்கடை அதிபர் ஒருவர் கூறுகையில், "வழக்கம் போல் நடைபெறும் வியாபாரத்தில் 70 சதவீத விற்பனையே நடந்துள்ளது. மழை மேலும் இரண்டு நாட்களுக்கு பெய்யும் படசத்தில், இது பெரிய பாதிப்பை தங்களுக்கு ஏற்படுத்தும்" என்று கூறினார்.
 
சென்னையில் காலை 08.30 மணி நிலவரப்படி 18 செ.மீ மழை பெய்துள்ளது. அதேபோல் பாபநாசம், பாண்டிச்சேரி, சீர்காழி, கடலூரின் பரங்கிபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 13 செ.மீ மழையும், தூத்துக்குடி, வேதராண்யம், ராம்நாடு ஆகியப் பகுதிகளில் 12 செ.மீ மழை பதிவகியுள்ளது.
 
மேலும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில், கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்