இன்று முதல் தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Mahendran

புதன், 19 பிப்ரவரி 2025 (10:09 IST)
இன்று முதல் தமிழக முழுவதும் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும். அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மூன்று டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பம் பதிவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
 
இதன்படி, இன்று முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள சில இடங்களில் பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும். பிற இடங்களில் வறண்ட வானிலை காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
ஆனால், அதே நேரத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான பனிமூட்டம் இருக்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். காலையில் லேசாக பனிமூட்டம் இருந்தாலும், மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்