கரூர் சம்பவம்.. வேகமாக பிரேத பரிசோதனை செய்தது ஏன்? அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம்..!

Mahendran

புதன், 15 அக்டோபர் 2025 (15:10 IST)
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் அமர்வில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ், ஆளுங்கட்சியின் அலட்சியம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
 
பிரேத பரிசோதனை வேகப்படுத்தப்பட்டது மனிதாபிமான அடிப்படையில் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலளித்தார்.
 
கரூர் கூட்ட நெரிசலுக்கு பின் சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஸ்டிக்கர்கள் இடம்பெற்றிருந்தது எப்படி?
 
சடலங்களின்  பிரேதப் பரிசோதனை நள்ளிரவு நேரத்தில், அவசர கதியில் நடத்தப்பட்டது ஏன்? இதற்கான அவசியம் என்ன?
 
தவெக தலைவர் விஜய், கரூருக்கு முன்னதாக நான்கு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்திருந்த நிலையில், அங்கு எவ்வளவு கூட்டம் கூடும் என்பது குறித்த உளவுத்துறை மற்றும் காவல்துறைத் தகவல்கள் அரசுக்குத் தெரியாதா?
 
மேற்கண்ட கேள்விகளுக்கு  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலளித்தார். அவர் கூறியதாவது:
 
இறந்தவர்களின் குடும்பத்தினரின் துயரமான மனநிலையைக் கருத்தில் கொண்டும், சடலங்களை விரைவாக கையாளுவதற்காகவும் மனிதாபிமான அடிப்படையிலேயே உடற்கூராய்வு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன், நள்ளிரவு 1.45 மணியளவில் 25 மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு, ஐந்து மேசைகளில் மொத்தம் 14 மணி நேரம் இந்தப் பணிகள் நடைபெற்றன. 
 
அனைத்து உடற்கூராய்வு நிகழ்வுகளும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் எந்தவிதமான ஒளிவுமறைவும் இல்லை. எனவே, உடற்கூராய்வு நடைமுறையில் சந்தேகம் கிளப்புவது ஏற்புடையதல்ல," என்று அமைச்சர் திட்டவட்டமாக பதிலளித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்