தமிழக அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், அகடம்பூர் ராஜூ, தமிழகத்தில் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனைக்கு தடையாக இருந்தது, ஆதாரத்தை அழித்தல், பெண் அதிகாரியை மிரட்டியது, தவறாக நடந்து கொண்டது போன்ற புகாரில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் அந்த மூன்று அமைச்சர்களை பொறுப்பில் இருந்து நீக்கவும், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்தை அந்த பொறுப்பில் இருந்து நீக்கவும், தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க ஆளுநர் மும்பையிலிருந்து சென்னை கிளம்பியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ஆளுநர் சென்னை வந்ததும், தமிழகத்தில் நடக்கும் பல்வேறு விஷயங்கள், வருமான வரித்துறை சோதனை போன்றவற்றை தலைமைச்செயலாளர், உள்துறை செயலர், டிஜிபி ஆகியோரை அழைத்து பேசுவார் என கூறப்படுகிறது. அதனை அடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு தடையாக இருந்த புகார் அளிக்கப்பட்ட மூன்று அமைச்சர்கள், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.