சுதந்திர தினத்தை யொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இடதுசாரிகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவை புறக்கணித்தன.
அதேவேளையில் ஆளுநரின் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். தேநீர் விருந்திற்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினை ஆளுநர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, பொன்முடி, எ.வ.வேலு உள்பட தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்க வந்திருந்த அனைவருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு முதல் வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த தேநீர் விருந்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.
பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் எச்.ராஜா, வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக சார்பில் ஜி.கே.மணி, தேமுதிக சார்பில் பிரேமலதா, எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் தேநீர் விருந்தில் பங்கேற்றனர்.