ரூ.28 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை! ஓரிரு நாளில் ரூ.30 ஆயிரம்?

வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (08:54 IST)
தங்கத்தின் விலை கடந்த இரண்டு மாதங்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் நேற்றைய நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 28 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதே ரீதியில் உயர்ந்து கொண்டே சென்றால் இன்னும் ஓரிரு நாட்களில் அதாவது இந்த வாரத்திற்குள் தங்கம் சவரன் ஒன்றுக்கு விலை ரூபாய் 30 ஆயிரத்தைத் தொடும் என வியாபாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக தங்கத்தின் விலையை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்து கொண்டே சென்று கொண்டுள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.26,480 என விற்பனை செய்த நிலையில் ஆகஸ்ட் 2 ஆம் தேதியே ரூபாய் 584 அதிகரித்து ரூ.27 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகும் தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏறிக் கொண்டே வந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ3,483 க்கு விற்பனையானது 
 
இந்த நிலையில் நேற்று மாலை நிலவரப்படி மேலும் 74 ரூபாய் அதிகரித்து ஒரு பவுன் தங்கத்தின் விலையில் ரூபாய் 28,376 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரே வாரத்தில் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு சுமார் 1,896 ரூபாய் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்த பலர் உற்சாகத்தில் உள்ளனர் 
 
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது உலக பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதே என தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பு குறைவு, தொழில் உற்பத்தி அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானது அல்ல என முதலீட்டாளர்கள் முடிவு செய்து, தங்கத்தின் மீது முதலீடு செய்வதால் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாகவும் இதே ரீதியில் சென்றால் நாளை அல்லது நாளை மறுநாள் ரூபாய் தங்கம் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரத்தை தொட வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்