சிறுமி படுகொலை வழக்கு: எடப்பாடி பழனிசாமி, தினகரன் கண்டனம்!

Sinoj

புதன், 6 மார்ச் 2024 (15:31 IST)
புதுச்சேரி மாநிலம், 5ம் வகுப்பு படித்து வந்த 9வயது சிறுமி , கொடுர மனம் படைத்த சிலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு , கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்களை, தெரிவித்துக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாவது:

''குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு போக்சோ சட்டங்கள் மட்டும் போதாது, இத்தகைய காட்டுமிராண்டிகளுக்கு உட்சப்பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், அதுவே இது போன்ற குற்றங்கள் இனி தொடராமல் பாதுகாக்கும் எனவும் வலியுறுத்துவதுடன். பச்சிளம் குழந்தையை இழந்து வாடும் பெற்றோரின் வேதனையில் நானும் உங்களது குடும்பத்தில் ஒருவனாக பங்கெடுத்துக் கொள்வதுடன், அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.


இந்த வழக்கு குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளதாவது:

''புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டையில் மாயமான சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் கழிவுநீர் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
 
குற்றச் சம்பவங்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய காவல்துறை, பெற்றோர்கள் புகார் அளித்த பின்பும் அலட்சியமாக செயல்பட்டதே சிறுமியின் கொலைக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
 
புதுச்சேரி மாநிலம் முழுவதுமே அண்மைக்காலமாக கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதன் விளைவே இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுவதற்கு வாய்ப்பாக அமைந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 
எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் நிகழாமல் இருக்க மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதோடு, சிறுமியின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனவும் புதுச்சேரி மாநில அரசை வலியுறுத்துகிறேன்''என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்