கொல்கத்தாவை சேர்ந்தவர் வினிதா. இவர், சென்னை மீஞ்சூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கார் நிறுவனத்தில் அதிகாரியாக பணி புரிந்து வருகிறார். தி.நகரில் உள்ள பெண்கள் விடுதியில் அவர் தங்கியிருந்து தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில், தினமும் தன்னை அழைத்து செல்ல வரும் நிர்வாக பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர், அவரிடம் ஏதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, திடீரெனெ மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வினிதாவின் வயிற்று பகுதியில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் அலறியுள்ளார். அவரின் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து மடக்கி பிடித்தனர். மேலும், வினிதாவை ஆம்புலன்ஸ் மூலம் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அந்த வாலிபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பெயர் ரகுநாதன் எனபதும், வினிதா வேலை செய்து வரும் அதே கம்பெனியில், அவர் ஒப்பந்த ஊழியராக பணி புரிந்து வந்தவர் என்பது தெரிய வந்தது. அந்நிலையில், வினிதா செல்லும் அதே பேருந்தில் செல்லும் ரகுநாதன், ஒருமுறை வினிதாவை இடித்துவிட்டார். அப்போது, அவருக்கு சுஜிக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. அதன்பின் ரகுநாதன், அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். எனவே, அதே நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரியும் தனது தந்தையிடம் இதுபற்றி வினிதா தெரிவித்துள்ளார். எனவே, அவர் ரகுநாதனை வேலையிலிருந்து நீக்கி விட்டார்.
இதையடுத்து, வேறு எங்கு தேடியும் ரகுநாதனுக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே, தன்னுடைய வேலை பறிபோக காரணமாக இருந்த வினிதாவை பழிவாங்கும் நோக்கத்தில் அவரை கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.