சென்னையில் அடகு கடைக்காரரை கொல்ல முயன்ற கொள்ளையர்கள் : அதிர்ச்சி வீடியோ

திங்கள், 25 ஜூலை 2016 (17:50 IST)
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு நகை அடகுக் கடையில் புகுந்த சில கொள்ளையர்கள், கடையின் உரிமையாளரை கத்தி முனையில் மிரட்டி கொல்ல முயன்ற சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.


 

 
சென்னை கிழக்கு கடற்கரையில் உள்ள உத்தண்டி பகுதியில் அடகு கடை நடத்தி வருபவர் சுரேஷ். இவர் பனையூரைச் சேர்ந்தவர். இவரின் கடைக்கு கடந்த சனிக்கிழைமை, மதியம் 12.30 மணியளவில் ஐந்து நபர்கள் வந்துள்ளனர். 
 
தாங்கள் கோவளத்திலிருந்து வருவதாகவும், தங்களிடம் இருக்கும் நகைகளை அடமானம் வைகக் வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அவர்களின் மீது சந்தேகம் அடைந்த சுரேஷ், முன்பின் தெரியாதவர்களின் நகைக்காக பணம் தர முடியாது என்று கூறியுள்ளார்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், சுரேஷை பிடித்து கொலை செய்யும் நோக்கில் தாக்கியுள்ளனர். அதில் ஒருவன் கைத்தியை எடுத்து அவரின் கழுத்தில் வைத்துள்ளான். மற்றொருவன் கைக்குட்டையை அவரின் வாயில் திணிக்க முயல்கிறான். எனினும், அவர்களிடமிருந்து தப்பி சாலைக்கு சென்ற சுரேஷ், சத்தம் போட்டு அருகிலிருப்பவர்களின் உதவிக்கு அழைத்துள்ளார்.
 
இதனால், அருகிலிருந்தவர்கள் அங்கு திரண்டனர். இதைக் கண்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 
 
இதுபற்றி சுரேஷ் புகார் கொடுக்க காவல் நிலையம் சென்ற போது, புகாரை பெற மறுத்ததோடு, இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று சுரேஷை போலீசார் மிரட்டியதாக தெரிகிறது. இந்த வீடியோ தற்போது வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 
 
பட்டப்பகலில், இப்படி கடைக்குள் கத்தியோடு கொள்ளையர்கள் புகுந்த விவகாரம், அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்