சசி பெருமாள் மரணம்: நேர்மையான விசாரணை கோரி குமரியில் சர்வகட்சிகள் இன்று கடையடைப்பு போராட்டம்

சனி, 1 ஆகஸ்ட் 2015 (02:16 IST)
காந்தியவாதி சசி பெருமாள் மரணம் குறித்து நேர்மையான விசாரணை நடத்திக் கோரி, மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் குமரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட்1ஆம் தேதி) முழு அடைப்புப் போராட்டம் நடத்த உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
 

 
காந்தியவாதி சசி பெருமாள் மரணம் குறித்து தகவல் அறிந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், காந்தியவாதி சசி பெருமாள் மரணம் குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழக மக்களை மது அரக்கனின் கோரப் பிடியிலிருந்து மீட்பதற்காக காந்தியவாதி சசிபெருமாள் உயிரையே பணயம் வைத்து கடந்த சில ஆண்டுகளாக தன்னை அர்ப்பணித்து இடைவிடாத உண்ணாவிரதம் போன்ற அறப்போராட்டங்களை நடத்தி வந்தார்.
 
கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டத்துக்கு அருகில் உள்ள உண்ணாமலைக்கடை எனும் ஊரில் தேவாலயங்களுக்கும், பாடசாலைகளுக்கும் அருகில் இருந்த டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பொதுமக்கள் போராடி வந்தார்கள். 
 
அந்த டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி சில நாட்களுக்கு முன்பு காந்தியவாதி சசி பெருமாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அப்பொழுது தமிழக அரசு அதிகாரிகள் ஒரு வார காலத்துக்குள் டாஸ்மாக் கடையை அந்த இடத்திலிருந்து அகற்றி விடுவோம் என்று உறுதி அளித்தனர். ஆனால், அந்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை.
 
இந்த நிலையில், நேற்றைய தினம் மாமனிதர் அப்துல்கலாம் அவர்களின் நல்லடக்க நிகழ்ச்சிக்கு சசிபெருமாள் வந்திருந்தார். அங்கிருந்து இரவே குமரி மாவட்டத்துக்கு வந்த சசி பெருமாள், அதிகாலையிலேயே உண்ணாமலைக்கடை ஊருக்கு அருகில் 150 அடி உயரத்துக்கும் அதிகமாக உள்ள அலைபேசி கோபுரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்.
 
டாஸ்மாக் கடையை அகற்றாவிடில், என் கையில் உள்ள தீப்பந்தத்தால் என்னை தீ வைத்துக் கொளுத்தி உயிர் விடுவேன் என்று கூறினார். 5 மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் வெறும் பேச்சுவார்த்தை நடத்தினார்களே தவிர, அந்த டாஸ்மாக் கடையை அகற்றவில்லை.
 
வயதில் முதிர்ந்த சசி பெருமாள் அவர்களின் மனதில் எவ்வளவு உறுதியும் வைராக்கியமும் இருந்திருந்தால் கோபுரத்தின் உயரத்துக்குச் சென்றிருக்க முடியும் என்பதை நாமே ஊகித்துக் கொள்ளலாம். இதன் பிறகு காவல்துறையினர் அவரை கோபுரத்தின் உச்சியில் இருந்து அவரை கயிற்றால் கட்டி வலுக்கட்டாயமாக கீழே  கொண்டுவந்துள்ளனர். கீழே வந்தவுடன் அவர் இறந்துவிட்டார் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
 
செய்தியைக் கேள்விப்பட்ட நான், நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு விரைந்தேன். குழித்துறை மருத்துவமனைக்கு சசிபெருமாள் கொண்டுசெல்லப்பட்டார் என்று அறிந்து மருத்துவமனைக்கு எதிரே திரண்ட பொதுமக்களை காவல்துறையினர் அடித்து விரட்டினர். 
 
சசி பெருமாளின் சடலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது என்று அறிந்து அங்கு சென்றேன். சசிபெருமாள் உடலைப் பார்த்தபோது கடுமையான அதிர்ச்சிக்கு ஆளானேன். அவர் கழுத்து, மார்பு, வயிறு முழுவதும் இரத்தத்தால் நிறைந்து உடைகள் நனைந்திருந்தன. மூக்கு வழியாகவும் இரத்தம் வந்துள்ளது. அப்படியானால் சசிபெருமாள் எப்படி உயிர் நீத்தார்?
 
மனிதாபிமானம் இன்றி அவரை கயிற்றால் கட்டி வலுக்கட்டாயமாக அலைபேசி கோபுரத்திலிருந்து அகற்ற முற்பட்டதில் பலத்த இரத்தக் காயம் ஏற்பட்டு, இருதயம், நுரையீரல், கல்லீரல் பகுதிகளில் அடிபட்டு அவர் இறந்திருக்க வேண்டும். அப்படியானால் சசிபெருமாள் மரணம் இயற்கை மரணம் அல்ல, உண்மையைக் கண்டறிய இந்தச் சம்பவம் குறித்து பதவியில் தற்போதுள்ள உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்த  வேண்டும்.
 
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த நேர்மை தவறாத மருத்துவர்களைக் கொண்டு ஒரு மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் வீடியோ காணொளி கண்காணிப்பில்  அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும். 
 
காந்தியவாதி சசிபெருமாள் மரணம் குறித்து நேர்மையான விசாரணை நடத்திக் கோரி, குமரி மாவட்டத்தில்  மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் குமரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட்1ஆம் தேதி) முழு அடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். 
 
வீரத் தியாகியின் குறிக்கோளை நிறைவேற்ற தமிழ்நாட்டில் தாய்மார்களும், மதுப்பழக்கத்துக்கு ஆளாகாத இளைஞர்களும், குடிப்பழக்கம் எனும் நரகத்தில் விழாத 95 சதவிகித மாணவர்களும் மதுக்கடைகளை ஒழிக்க சபதம் ஏற்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக தமிழக அரசு மூட வேண்டும்; முழு மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்.
 
உத்தமத் தியாகி சசி பெருமாளை இழந்து துயரத்தில் துடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியை தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்