வெள்ள அபாயம் குறித்து முன்னெச்சரிக்கை செய்யும் புதிய வசதி: கூகுள் திட்டம்

புதன், 10 பிப்ரவரி 2016 (08:37 IST)
வெள்ள அபாயத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் புதிய வசதியை மத்திய அரசுடன் இணைந்து வழங்க உள்ளது கூகுள் நிறுவனம்.


 

 
இந்தியாவில் 170 இடங்களில் ஆற்றின் நீர்மட்டம் குறித்த முக்கிய தகவல்களை உடனடியாக வழங்க மத்திய அரசுடன் இணைந்து தயாராகி வருகிறது கூகுள்.
 
வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் ஏற்பட்டால் உடனடியாக மக்களுக்கு எச்சரிக்கை செய்ய இந்த வசதியால் முடியும்.
 
அத்துடன், பேரிடர் நேரத்தில் மக்கள் சம்பவ இடத்தை விட்டு வெளியேறுவதற்கு துல்லியமான தகவல்களையும், வழிமுறைகளையும் இது வழங்வுள்ளது.
 
இந்த தகவல்களை கூகுள் வெப் சர்ச், கூகுள் நவ் கார்ட்ஸ், கூகுள் ஆப்ஸ், கூகுள் பப்ளிக் அலர்ட்ஸ் ஹோம்பேஜ் ஆகியவற்றில் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போனில் இருந்து ஆன்லைன் வழியாக தெரிந்து கொள்ளலாம்.
 
வெள்ள பாதிப்பு இந்தியாவில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. சராசரியாக ஆண்டுதோறும் 3 கோடி பேர் இந்தியாவில் வெள்ள பாதிப்புக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது.
 
மத்திய அரசின் மத்திய நீர் ஆணையத்தின் (சி.டபிள்யூ.சி) தகவலின்படி, ஆண்டுதோறும் சராசரியாக 7.21 மில்லியன் ஹெக்டேர்கள் நிலம் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன.

பயிர்கள் சேதமடைவதால் ஆண்டுதோறும் ரூ.1,118 கோடி இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ள அபாயத்தை முன்கூட்டியே அறியும் இந்த புதிய வசதி பெரிதும் துணைபுரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கடந்த ஆண்டு புயல் வருவதை முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் "சைக்ளோன்" வசதியை அறிமுகம் செய்த கூகுள் நிறுவனம் தற்போது வெள்ள அபாயம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்து ஆபத்தை தவிர்க்கும் புதிய அலர்ட் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது எனது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்