கருக்கலைப்புக்காக சென்ற பெண்ணை இப்படியா செய்வது??

திங்கள், 24 ஜூன் 2019 (18:01 IST)
மதுரையைச் சேர்ந்த பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்வதற்கு பதிலாக குடும்ப கட்டுபாடு செய்த செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மருதங்குடி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கின்றன.

இதற்கிடையே அப்பெண் மீண்டும் கற்பமாகியுள்ளார். தான் மீண்டும் கற்பமாகியதை விரும்பாத அப்பெண், கடந்த 12 ஆம் தேதி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்த அந்த பெண்ணிற்கு வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. அதன் பின்பு அடுத்த நாள் அருகிலுள்ள தனியார் ஸ்கேன் மையத்துக்குச் சென்று விவரங்களைக் கூறி பரிசோதனை செய்துள்ளார்.

அந்த பரிசோதனையில், கருக்கலைப்பிற்கு பதில் குடும்ப கட்டுபாடு செய்திருப்பதாக தெரியவந்தது. இதனை அறிந்தவுடன் அதிர்ச்சியடைந்த அப்பெண் மீண்டும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்குள்ள மருத்துவர்களிடம் தனக்கு கருக்கலைப்பிற்கு பதில் குடும்ப கட்டுபாடு செய்துள்ளதாக கூறினார். பின்பு அங்குள்ள மருத்துவர்கள் அப்பெண்ணிற்கு மீண்டும் கருக்கலைப்பு செய்வதாக கூறி அன்று இரவு அந்த மருத்துவமனையிலேயே தங்கவைத்தனர்.

ஆனால் அந்த பெண் சிகிச்சைக்கு பயந்து இரவோடு இரவாக மருத்துவமனையிலிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.

அப்பெண் இரவோடு இரவாக தப்பியோடியதை அறிந்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், அந்த பெண்ணை தொடர்பு கொண்டு சிகிச்சைக்கு வருமாறு அழைத்தனர்.

ஆனால் அப்பெண் சிகிச்சைக்காக பயந்து சிகிச்சைக்கு வரமுடியாது என மறுத்துவிட்டார். மேலும் அப்பெண்னை அழைத்துவர மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் அனுப்பியுள்ளனர்.

அதன் பின்பும் அவர், தான் தனியார் மருத்துவமனையிலேயே சிகிச்சை பார்த்து கொள்வதாக கூறி மறுத்துவிட்டார்.

தமிழகத்தில் பெரும்பாலோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை நம்பாமல் தனியார் மருத்துவமனைக்கே செல்கின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் அப்பகுதி மக்களுக்கு, அரசு மருத்துவமனை மீது, பயத்தையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்திவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்