கடந்த சில நாட்களுக்கு முன்பு, டாஸ்மாக் அலுவலகம் மற்றும் மது ஆலை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில், தற்போது எஸ்டிபிஐ நிர்வாகியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில், குறிப்பாக மேட்டுப்பாளையத்தில், எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகி ராஜிக் என்பவரின் வீட்டில் இன்று சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் இரும்பு கடை தொழில் செய்பவர் மற்றும் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், சி.ஆர்.பி.எப். போலீசார் உதவியுடன் சோதனை செய்து வருவதாகவும், மேலும், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பழக்கடை வைத்துள்ள ஒருவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.