''மின் கட்டண உயர்வால் அதிகளவு பாதிப்பைச் சந்தித்திருக்கும் நூல் உற்பத்தி ஆலைகள் இன்று முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியிருப்பதால் உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படுவதோடு, அதனை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர் பொருளாதார மந்தநிலை, மூலப்பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை என ஏராளமான இன்னல்களைச் சந்தித்து வரும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை முற்றிலும் முடங்கும் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக தொழில் அமைப்பினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளான நிலைக்கட்டண உயர்வு மற்றும் உச்ச நேர மின் கட்டணத்தை ரத்து செய்து தொழில் நிறுவனங்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்''