நாங்கதான் அறிவிச்சோம்.. இல்ல நாங்கதான் முதல்ல..! – வாக்குறுதிகள் குறித்து சோசியல் மீடியாவில் மோதல்!

செவ்வாய், 9 மார்ச் 2021 (10:52 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வரும் நிலையில் அவற்றை யார் முதலில் அறிவித்தது என சமூக வலைதளங்களில் கட்சியினர் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் மநீம, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளையும் அளிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் தேர்தல் வாக்குறுதிகள் அளித்த மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊதியமாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்த தாய்மார்களுக்கு ஊதிய திட்டத்தை முன்னதாகவே மநீம கமல்ஹாசன் அறிவித்ததாகவும், அதை திமுக காப்பி அடித்து விட்டதாகவும் மய்யத்தார் சமூக வலைதளங்களில் பேசி வந்ததால் திமுக – மநீம தொண்டர்கள் இடையே சமூக வலைதளங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் தாய்மார்களுக்கு மாத ஊதியமாக ரூ.1500 வழங்குவதாக அதிமுக அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவல நிலையை முற்றிலும் ஒழிப்பதாக மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்த நிலையில், இந்த திட்டம் ஏற்கனவே அதிமுக அரசால் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாக எஸ்.பி.வேலுமணி பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்